TNPL FINAL| மதுரையை வீழ்த்தி.. 3வது முறையாக சாம்பியனானது கோவை கிங்ஸ்..!
2026 தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸை 98 ரன்னுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் மூன்றாவது டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியது. தொடக்கத்தில் 4 ஆட்டங்களில் 3 தோல்வி கண்ட கோவை, பின்னர் அபார கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்ட்ரே சித்தார்தின் 82 ரன்கள், பந்துவீச்சு பிரிவு ஒற்றுமையாக செயல்பட்டது.
2026 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட மதுரை பந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், விடா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
திருச்சி - மதுரை அணிகள் மோதிய குவாலிஃபையர் 1 மற்றும் திருப்பூர் - கோவை அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டிகள் மழையால் ரத்தான நிலையில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் மதுரை பந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. அதேபோல குவாலிஃபையர் 2 போட்டியில் திருச்சியை 99 ரன்னுக்கு சுருட்டி வென்ற கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று பரபரப்பாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 34 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்தில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 82 ரன்கள் குவித்து மிரட்டினார். அவருடைய அபாரமான ஆட்டத்தால் 20 ஓவரில் 182 ரன்களை குவித்தது கோவை கிங்ஸ் அணி.
183 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி திணறடித்தார் தீபன் லிங்கேஷ். மற்றொரு தொடக்க வீரரையும் 0 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் மணிமாறன் சித்தார்த். 6 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மதுரை அணியை 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அடித்து மீட்டுவர போராடினார் சதுர்வேத். ஆனால் அவரையும் 40 ரன்னுக்கு வெளியேற்றிய கோவை கிங்ஸ் அணி, அடுத்தடுத்து வந்த வீரர்களையும் பெவிலியன் நோக்கி திருப்பியது.
அனைத்து விக்கெட்டுகளையும் அறுவடை செய்த கோவை கிங்ஸ், மதுரையை 98 ரன்னுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
ஆரம்பத்தில் முதல் 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் தோற்ற கோவை அணி, அதற்கு பிறகு கம்பேக் கொடுத்து கோப்பையை வென்று மகுடம் சூடியது. இது கோவை அணி வெல்லும் 3வது டிஎன்பிஎல் கோப்பையாகும்.

