டைவ் அடித்து பிடித்த அசத்தலான கேட்ச்! சாய் சுதர்சனுக்காக கே.எல்.ராகுல் செய்த சர்ப்ரைஸ் செயல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் இம்பாக்ட் பிளேயர் பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார் இந்தியாவின் இளம்வீரர் சாய்சுதர்சன்.
Sai Sudharsan
Sai SudharsanBCCI

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிப்பெற்று தொடரை சமன்நிலையில் வைத்திருந்தன.

இந்நிலையில் தொடரை வெல்லக்கூடிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமானது. இத்தனை வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை மட்டுமே இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என வெற்றிபெற்று அசத்தியிருந்தது. இந்நிலையில் இந்தமுறை கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.

புலியைப்போல் பாய்ந்து பிடித்த சாய்சுதர்சன்! சரியான நேரத்தில் திரும்பிய ஆட்டம்!

தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தால் 296 ரன்களை போர்டில் போட்டது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 161 ரன்களில் 3 விக்கெட்டுகள் என சிறப்பான நிலையிலேயே இருந்தது. இரண்டாவது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்திருந்த டோனி டே ஜோர்ஜி, இந்த போட்டியிலும் 81 ரன்கள் அடித்த அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். அப்போது அவரை LBW மூலம் வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணியை போட்டிக்குள் அழைத்துவந்தார்.

போட்டி இந்தபக்கமா அந்த பக்கமா என்றிருந்த நிலையில் தான், அடுத்த பார்ட்னர்ஷிப்பை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த ஹென்ரிச் க்ளாசனை, ஒரு நம்பமுடியாத அற்புதமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் சாய் சுதர்சன். அவரை தவிர அந்த இடத்தில் மற்றவீரர்கள் யார் இருந்திருந்தாலும் கேட்ச்சை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். முன்பக்கமாக டைவ் செய்து அதுபோலான ஒரு கேட்ச்சை பிடிப்பதெல்லாம் மிகவும் கடினமான விசயம். சாய்சுதர்சன் தொடர்ந்து அதுமாதிரியான கேட்ச்களை பிடிப்பதற்கு கடுமையான பயிற்சி செய்திருந்தால் மட்டுமே இப்படியான கேட்ச்சை எடுத்திருக்க முடியும். அந்த பக்கமா இந்த பக்கமா என்றிருந்த போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பி கொண்டுவந்தது சாய்சுதர்சன் மட்டுமே. முடிவில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

தொடரின் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வென்ற சாய்சுதர்சன்!

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆரம்பித்த சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கும் கலாச்சாரத்தை, இந்திய அணி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. வீரர்களின் பீல்டிங் திறனை மேம்படுத்தும் முயற்சியாக வழங்கப்பட்டுவரும் இந்த பதக்கம் வழங்கும் முறையானது, இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் சிறப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இம்பாக்ட் பீல்டருக்கான பதக்கத்தை சாய்சுதர்சன் தட்டிச்சென்றுள்ளார்.

சாய்சுதர்சனுக்கு வழங்கும்போது கேப்டன் கேஎல் ராகுல் சொன்னதை கூறிய ஃபீல்டிங் பயிற்சியாளர் அஜய் ரத்ரா, “ODI தொடர் முழுவதும் பல அற்புதமான ஃபீல்டிங்கை நம் வீரர்கள் செய்தார்கள். இந்த ODI தொடரில் மட்டும் நாம் 12 கேட்ச்களை பிடித்துள்ளோம். அதில் கேஎல் ராகுல் மட்டும் 6 கேட்ச்களை பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் கீப்பராகவும், ஃபீல்டரகவும் இரண்டு தரமான கேட்ச்களை பிடித்துள்ளார். அதேபோல் சாய்சுதர்சன் இன்று ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்தார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

இதனால் இந்த மூன்று பேரில் யாரை தொடரின் சிறந்த ஃபீல்டராக முடிவு செய்வது என்ற கடினமான சூழல் இருந்தது. இந்த முடிவில் ராகுலுக்கும் சாய்க்கும் இடையே கடினமான போட்டி இருந்தது. ஆனால் அப்போது இந்த விருதை சாய்சுதர்சனுக்கு வழங்குமாறு கேஎல் ராகுல் என்னிடம் கூறினார். அதனால் தொடரின் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் சாய்சுதர்சனுக்கு செல்கிறது” என்று ரத்ரா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com