ODI கிரிக்கெட்டில் 50-ஐக் கடந்த பேட்டிங் சராசரி.. தோனியை பின்னுக்கு தள்ளிய கேஎல் ராகுல்!
கேஎல் ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 112 ரன்கள் குவித்து, தனது ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் சராசரியை 50-க்கு மேல் உயர்த்தினார். இதன்மூலம், அதிக பேட்டிங் சராசரி கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி முன்னேறினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக த்ரில் வெற்றியை ருசித்த இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடந்துவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது. 118 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது பொறுப்பை தனதாக்கி கொண்ட கேஎல் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 பந்தில் 112 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடக்கம்.
கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதம், ஒரு சதம் என விளாசிவரும் கேஎல் ராகுல், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் சராசரியை 50-க்கு மேல் உயர்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார் ராகுல்.
இந்திய வீரர்களை பொறுத்தவரையில் ஒருநாள் போட்டிகளில் கோலி (58.45), கில் (56.34), கேஎல் ராகுல் (51.67), தோனி (50.23) என 50-க்கு மேல் பேட்டிங் சராசரி கொண்டுள்ளனர்.

