இங்கிலாந்து மண்ணில் அசத்தல் சதம்.. 186* ரன்கள் குவித்த கருண் நாயர்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை அறிவித்துள்ளது தேர்வுக்குழு.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் விளையாடுவதற்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது இந்தியா ஏ அணி.
இங்கிலாந்து லயன்ஸ் vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
186* ரன்கள் குவித்த கருண் நாயர்..
கேன்டர்பரியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் வெளியேறினர். 51 ரன்னுக்கு 2 விக்கெட்டை இந்தியா இழக்க, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் மற்றும் கருண் நாயர் இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.
சதமடிப்பார் என நினைத்த சர்ஃபராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆனால் மறுமுனையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.
24 பவுண்டரிகள் 1 சிக்சர் என வெளுத்துவாங்கிய கருண் நாயர் முதல் நாள் முடிவில் 186* ரன்கள் அடித்து களத்தில் நீடிக்கிறார். இறுதியாக வந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய துருவ் ஜுரல் 82 ரன்களுடன் விளையாடி வருகிறார். முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்களை குவித்துள்ளது.