20 வயது சிஎஸ்கே வீரர் முதல் அரைசதம்.. +ரன்ரேட் சென்ற சிஎஸ்கே.. மும்பை படுதோல்வி!
சேப்பாக்கில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், 159 ரன்கள் இலக்கை 18.1 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக துரத்தி வீழ்த்தியது. ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், முதல் ஐபிஎல் அரைசதம் அடித்த கார்த்திக் சர்மாவின் 54 ரன்களும் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன. இதனால் பிளே ஆஃப் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டது.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. 40 போட்டிகளை கடந்துள்ள நிலையில், டாப் 4 இடத்திற்காக ஒவ்வொரு அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அந்தவகையில் 8 போட்டியில் 3 வெற்றியுடன் இருக்கும் சிஎஸ்கேவும், 8 போட்டியில் 2 வெற்றியுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் களமிறங்கின.
மும்பை வான்கடேவில் வைத்து மும்பையை சிஎஸ்கே வீழ்த்திய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் மும்பை பதிலடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பும், தோற்கும் அணிக்கு வெளியேறும் வாய்ப்பும் உள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் விரைவாகவே அவுட்டாகி வெளியேறினாலும், 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியான் ரிக்கல்டன் மற்றும் நமன் திர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 ஓவரில் 59 ரன்களை அடித்து அசத்தினர்.
5 சிக்சர்களை அடித்த ரிக்கல்டன் 37 ரன்னில் வெளியேற, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விரட்டி அரைசதமடித்தார் நமன் திர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவும் 2 பவுண்டரி 1 சிக்சர் என அதிரடி காட்ட 10 ஓவரில் 99 ரன்களை குவித்து மும்பை அணி நல்ல நிலைமயிலேயே இருந்தது. ஆனால் அதற்குபிறகு ஆடுகளம் மந்தமாக ரன் அடிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். மேலும் சிஎஸ்கே அணியும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த 20 ஓவரில் மும்பையால் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சஞ்சு சாம்சன் விரைவாகவே வெளியேறினாலும், உர்பில் பட்டேலின் அதிரடி கேமியோ மற்றும் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ருதுராஜ் மற்றும் கார்த்திக் சர்மா வெற்றியை உறுதிசெய்தனர். ருதுராஜ் 67 ரன்கள் அடிக்க, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உதவியுடன் 54 ரன்கள் விளாசிய கார்த்திக் சர்மா முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவுசெய்தார். ஆயுஷ் மாத்ரேவிற்கு பிறகு ஐபிஎல் அரைசதமடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் 20 வயது கார்த்திக் சர்மா.
ஒரு சீசனில் மும்பை அணிக்கு எதிராக 2 லீக் போட்டியையும் முதல் முறையாக வென்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.

