kapil dev
kapil devPT

“இந்த உலகத்தில் இரண்டே பேர் தான்” - இந்திய அணி தோல்வி குறித்து எமோசனலாக பேசிய கபில்தேவ்!

இந்திய அணி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய பின்னும் கோப்பை வெல்லாத போது ஏமாற்றமாகவும், மனம் உடைந்தும் போனது - கபில்தேவ்

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய ஒரு அணி என்றால் அது இந்திய அணி மட்டும் தான். 9 லீக் போட்டிகளில் விளையாடி 9-லும் வெற்றிபெற்ற இந்திய அணி, அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வென்ற பிறகு எப்படியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றுவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் சிறிது கவனம் இழந்த இந்திய அணி அன்றைய நாளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது.

2023 world cup final
2023 world cup final

இந்நிலையில் உலகக்கோப்பை தோல்விகுறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், தொடர்முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கோப்பையை வெல்லமுடியாமல் போனது ஏமாற்றமாகவும், இதயம் உடைந்த ஒன்றாகவும் இருந்தது என எமோசனலாக பேசியுள்ளார். இருப்பினும் இந்திய அணி இதற்கு பிறகு என்ன செய்யவேண்டும் என கோல்டன் வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

இந்த உலகத்தில் இரண்டே பேர் தான்! - கபில்தேவ்

சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கபில்தேவ், “ என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் இரண்டே பேர் தான். ஒருவர் கதை சொல்பவர்கள், மற்றொருவர் கதையையே உருவாக்குபவர்கள். கதையை உருவாக்குபவரை விட கதை சொல்பவராக தான் நான் இருக்க விரும்புகிறேன். அவர்கள் ஒரு விசயத்தின் பாதையை விவரிப்பதில் தலைசிறந்தவர்களாகவும், தெளிவான பார்வை உடையவராகவும் இருப்பார்கள். நீங்கள் கடந்த காலத்தில் நாங்கள் அதை செய்தோம் இதைசெய்தோம் என பேசத்தேவையில்லை. கடந்த காலத்தில் இருந்தவர்களை விட இந்த காலத்தில் இருக்கும் இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது என்றால் அது அனுபவம் மட்டும் தான். அதை நாம் அவர்களுக்கு பகிர்ந்து நல்ல வழியை மட்டும் காட்டினால் போதும். நம் பழையை கால கதையை புகழ்பாட வேண்டியதில்லை” என்று பேசினார்.

Kapil Dev
Kapil DevPT

மேலும் இந்திய அணியின் உலகக்கோப்பை பயணம் குறித்து பேசிய அவர், “இந்த கால சிறந்த இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இந்திய அணி நடந்து முடிந்த உலகக்கோப்பையில் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்கள் தொடர் முழுவதும் ஒரே அணியாக செயல்பட்டனர். இதற்கு முன் இதுபோன்ற ஒற்றுமையாக செயல்பட்ட இந்திய அணியை நாம் பார்த்திருக்க முடியாது. சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கோப்பை வெல்லாத போது நான் ஏமாற்றமடைந்தும், மனமுடைந்தும் போனேன். ஆனால் நம்மை போல மற்ற அணி வீரர்களும் விளையாட வந்திருக்கின்றனர், அன்றைய நாளில் அவர்கள் நம்மைவிட சிறப்பாக செயல்படும் போது அதை நாம் பாராட்ட வேண்டும். இந்திய அணி இந்த தவறிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அதைத்தான் நாம் காலங்காலமாக செய்துவருகிறோம். நாம் நம் கதையை வரும் இளைஞர்களுக்கு சொல்வோம், அவர்கள் நம்மை விட சிறந்த கதை ஒன்றை உருவாக்குவார்கள்” என இந்திய அணி அடுத்த வெற்றிக்கு தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com