”இப்படியெல்லாம் ஜெயிக்கணுமா?”- விவாதத்தை கிளப்பிய ஜானி பேர்ஸ்டோ அவுட்; பென் ஸ்டோக்ஸ் சொன்ன கமெண்ட்!

2023 ஆம் ஆண்டுக்கான ஆஷிஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஜான் பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
bairstow
bairstowptweb

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Aus Vs Eng / Ashes Test
Aus Vs Eng / Ashes TestTwitter

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்களையும், இங்கிலாந்து 325 ரன்களையும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 279 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நாளில் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மற்றும் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் 132 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் டக்கெட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்த போதும் இங்கிலாந்து அணி இராண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது.

க்ரீன் வீசிய 51 ஆவது ஓவரில் இறுதிப் பந்தை அடிக்காமல் பேர்ஸ்டோ குனிந்து கொண்டார். பந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. அப்போது பேர்ஸ்டோ கிரீஸை விட்டு வெளியேறி பென்ஸ்டோக்ஸை நோக்கி சென்றார். எந்த ஒரு பேட்டரும் தன் அருகில் இருக்கும் ஸ்லீப் வீரரையோ கீப்பரையோ அல்லது அம்பயரையோ பார்த்து விட்டே செல்வர். ஆனால் பேர்ஸ்டோ சாதாரணாக நடந்து சென்றார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அலெக்ஸ் கேரி உடனடியாக பந்தை ஸ்டெம்ப் நோக்கி வீசினார். பந்து ஸ்டெம்பில் பட்டதும் ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட்டிற்காக முறையிட்டனர். முடிவு மூன்றாம் நடுவருக்கு செல்ல அவர் பேர்ஸ்டோ அவுட் என அறிவித்தார்.

நடுவரின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ட்விட்டரில் பேர்ஸ்டோ அவுட் ஆன காணொளியை பதிவிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறுகையில், “பேர்ஸ்டோ அவுட்டானதை பொறுத்தவரை ஓவர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதா என நடுவரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு நடுவர்கள் இல்லை என்று தான் கூறினார்கள். அது அவுட் என்பதை நான் மறுக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு அது வெற்றிகான தருணம். இம்மாதிரியான முறையில் வெற்றி பெற வேண்டுமா என கேட்டால் என்னுடைய பதில் வேண்டாம் என்பது தான்” என தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்த பின் பேர்ஸ்டோ அவுட்டானது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “இது நியாயமான அவுட் தான். ஜானி பேர்ஸ்டோ இதை பல முறை செய்துள்ளதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். முதல் நாள் ஆட்டத்தில் வார்னருக்கும் 2019 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இதேபோல் செய்துள்ளார். கீப்பர்கள் இப்படி செய்வது என்பது மிகவும் பொதுவான விஷயம். இந்த அவுட்டிற்கான முழு பெருமையும் அலெக்ஸ் கேரியையே சாரும். சில பந்துகளுக்கு முன்பிருந்தே அவர் தனக்கான வாய்ப்பினை தேடிக்கொண்டிருந்தார். அவுட்டிற்கான முடிவை நாங்கள் நடுவரிடம் விட்டுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

bairstow
bairstowptweb

இது குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுகையில், “ஒரு உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டியில் பேட்டர் ஒருவர், பேர்ஸ்டோ செய்ததைப் போல் பந்தை விட்டுவிட்டு க்ரீஸை விட்டு வெளியேறும் விதத்தை அணியின் மற்ற வீரர்களோ அல்லது கீப்பரோ கவனிக்காமல் இருந்தால் ஒழிய அவ்வளவு தூரத்தில் இருந்து அவுட்டாக்குவதற்கு கீப்பர் முற்படமாட்டார். நியாயமற்ற விளையாட்டு என்பதற்கு பதிலாக தனிநபரின் விளையாட்டு புத்திசாலித்தனத்தை நாம் பாராட்ட வேண்டும்” என கூறிப்பிட்டுள்ளார்.

5 போட்டிகளை கொண்ட ஆஷிஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com