பும்ரா
பும்ராweb

”புதியவர்கள் மேல் கோபத்தை காட்டக்கூடாது..” கேட்ச்களை தவறவிட்டது குறித்து மனம் திறந்த பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சில் 3 கேட்ச்களை இந்திய அணி ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டது. இது இங்கிலாந்து அணியை 465 ரன்கள் குவிக்க உதவியது.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் அடித்துள்ளன.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸின் போது 4 ரன்னுக்கே முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, அடுத்துவந்த வீரர்களையும் அவுட்டாக்கும் வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் பென் டக்கெட், ஓலி போப் மற்றும் ஹாரி புரூக் முதலிய 3 வீரர்களின் கேட்ச்களை பும்ராவின் பந்துவீச்சில் இந்தியா ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டது. அது மட்டுமில்லாமல் ஹாரி ப்ரூக்கை பும்ரா டக்அவுட்டில் வெளியேற்றிய போதும், அது நோ-பால் என்பதால் நாட் அவுட்டாக மாறியது.

இப்படி இந்திய அணி பந்துவீச்சில் ஒரு அரைநாளையே கொண்டிருந்தது. இருப்பினும் முடிவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

புதியவர்கள் மீது கோபத்தை காட்டக்கூடாது..

5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு தன்னுடைய பந்துவீச்சில் கேட்ச்களை தவறவிட்டது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, “கேட்ச்களை தவறவிட்ட அந்த நொடி, மிகவும் மனமுடைந்துவிட்டேன். இருப்பினும் இது விளையாட்டின் ஒரு பகுதிதான், அதற்காக உட்கார்ந்து அழுதுகொண்டே இருக்க முடியாது.

களத்தில் நிறைய புதிய வீரர்கள் இருந்தனர், அவர்களிடம் என்னுடைய எமோஷனை காண்பித்து, அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. யாரும் இங்கே எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதால், புதியவர்கள் அனுபவத்தில் அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள்” என்று பேசினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. களத்தில் கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் விளையாடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com