ஆசிய கோப்பை 2025| இந்திய டி20 அணியில் இடமில்லை.. நிராகரிக்கப்படுவது குறித்து ஜெய்ஸ்வால் ஓபன்!
17வது ஆசியக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றுள்ளது. லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரையில் துணை கேப்டன் சுப்மன் கில் உள்ளே வந்ததும், அபிஷேக் சர்மாவின் இருப்பிடமும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்குமான இடத்தை பறித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 23 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 723 ரன்கள் குவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசியக்கோப்பை அணியில் இடம்பெறாதது விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெய்ஸ்வால் அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மனம் திறந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்..
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்காதது குறித்து பேசியிருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், “அணியில் இடம்கிடைக்காததைப் பற்றி நான் யோசிக்கவில்லை. எல்லாம் தேர்வாளர்களின் கைகளில்தான் உள்ளது. அணியின் காம்பினேஷனை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்திய அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
எனது நேரம் வரும்போது, விஷயங்கள் சரியாக நடக்கும். நான் என்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு, கடினமாக உழைக்க விரும்புகிறேன்” என்று சமீபத்திய உரையாடல் ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார்.
மேலும் பின்தங்கிய வறுமையான சூழலில் இருந்துவந்து வெற்றிபெற்றது குறித்து பேசிய அவர், "நான் பெரிய அளவில் ஏதாவது செய்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்தது. நான் ஒருபோதும் கடினமாக உழைப்பதை நிறுத்த மாட்டேன். எப்போதும் என்னுடைய கனவு இந்திய அணியை உலகக்கோப்பை வெல்ல வைப்பதுதான். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்றது எனக்கு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நாடு திரும்பியபோது இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என்று பேசியுள்ளார்.