’இங்கிலாந்து மண்ணில் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சதம்..’ பிரமாண்ட சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 18 வருடங்களாக இவ்விரு அணிகளும் மோதும் தொடருக்கு வழங்கப்பட்டுவந்த ’பட்டோடி டிராபி’ நிறுத்தப்பட்டு தற்போது ’ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கோப்பையே இனி இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோப்பையை ஆண்டர்சன் மற்றும் டெண்டுல்கர் இருவரும் நேற்று அறிமுகம் செய்துவைத்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று இங்கிலாந்து லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங் செய்துவருகிறது.
5வது டெஸ்ட் சதம் விளாசினார் ஜெய்ஸ்வால்..
விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து பந்துவீச இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்தன.
எவ்வளவு முயற்சித்த போதும் இங்கிலாந்து பவுலர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியாதநிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு லீட்ஸ் மைதானத்தில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஜோடி அசத்தியது.
92/0 என வலுவான நிலையில் இந்தியா இருக்க, மதிய உணவிற்கு செல்வதற்கு இன்னும் 10 நிமிடம் இருந்தபோது அடிக்க முயன்ற கேஎல் ராகுல் 42 ரன்னில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தவந்த சாய் சுதர்சன் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் 0 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வந்ததிலிருந்தே அதிரடியாக விளையாடிய பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் கில் இந்தியாவின் மீதும் அழுத்தம் சேர அனுமதிக்கவில்லை. மறுமுனையில் ஜெய்ஸ்வாலும் அதிரடிக்கு திரும்ப இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்தினர்.
16 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் சுப்மன் கில் அரைசதமடிக்க, 101 ரன்கள் அடித்திருந்தபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 226/3 என்ற வலுவான நிலையில் இந்தியா பேட்டிங் செய்துவருகிறது.
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.
இதற்கு முன் 4 இந்திய வீரர்கள் மட்டுமே இந்த பிரத்யேக சாதனையை படைத்திருந்த நிலையில், 5வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் ஜெய்ஸ்வால்.
இங்கிலாந்தில் அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த இந்தியர்கள்:
* முரளி விஜய் - 146 ரன்கள் - ட்ரெண்ட் பிரிட்ஜ் - 2014
* விஜய் மஞ்ச்ரேக்கர் - 133 ரன்கள் - ஹெடிங்லி - 1952
* சவுரவ் கங்குலி - 131 ரன்கள் - லார்ட்ஸ் - 1996
* சந்தீப் பாட்டீல் - 129* ரன்கள் - ஓல்ட் டிராஃபோர்ட் -1982
* யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 101 ரன்கள் - ஹெடிங்லி - 2025