‘சிங்கிள் எடுத்து சொந்த சாதனைக்காக விளையாட மாட்டேன்..’ - இஷான் கிஷன்
இஷான் கிஷன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 215 ரன்கள் குவித்து, அதிக சிக்சர்கள் அடித்த வீரராக விளங்கினார். அவர் சொந்த சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று கூறினார். மைல்கல் சாதனைகளை நெருங்கினாலும், அணிக்காக வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
’கடைசியாக தான் வந்தார் விநாயக்’ என்பது போல் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ரன்களாக குவித்த இஷான் கிஷன், கடைசி நேரத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இஷான் கிஷன், நேற்று நடந்த 5வது டி20 போட்டியில் 42 பந்தில் சதமடித்து மிரட்டினார். அதில் 10 சிக்சர்கள அடிக்கப்பட்டன.
தன்னுடைய சிறந்த ஃபார்ம் மூலமாக 2026 டி20 உலகக்கோப்பையின் பிளேயிங் 11-ல் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷன் இடம்பிடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
சொந்த சாதனைக்காக விளையாட கூடாது..
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் அரைசதம் உட்பட 215 ரன்கள் குவித்த இஷான் கிஷன், தொடரில் 16 சிக்சர்களுடன் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக ஜொலிக்கிறார். மேலும் சதமடித்து கடைசி டி20 போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசியிருக்கும் இஷான் கிஷன், சொந்த மைல்கல் சாதனைகளை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம் என்று பேசினார்.
இது குறித்து பேசுகையில், "எங்கள் அணியில் உள்ள அனைவரின் மனநிலையும் இப்போது சொந்த சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு மைல்கல் சாதனையை நெருங்கியிருந்தாலும், அது உண்மையில் ஒரு பொருட்டல்ல. அந்த நேரத்தில் நீங்கள் சிங்கிள் எடுத்து விளையாடுகிறீர்கள் என்றால், பின்னர் அப்போதே அடித்திருக்கலாமே வாய்ப்பைத் தவறவிட்டுட்டோமே என்று உணரலாம். எனவே பந்து அடிக்கும் வகையில் இருந்தால், நீங்கள் அதை அப்போதே செய்துவிட வேண்டும். தனிப்பட்ட மைல்கல்லை விட, அணிக்காக போட்டிகளில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்” என்று பேசியுள்ளார்.

