இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிweb

துபாய் ஆடுகளம் இந்தியாவிற்கு சாதகமானதா? உண்மையை வெளிப்படுத்திய சவுரவ் கங்குலி!

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி துபாயில் விளையாடுவதால் இந்தியாவிற்கு சாதகமான சூழல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
Published on

பாதுகாப்பு கவலை காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.

மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் துபாய் என பயணம் செய்து விளையாடிவரும் சூழலில், இந்தியா ஒரே ஸ்டேடியத்தில் போட்டிகளை விளையாடுவது சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் பல முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிcricinfo

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக் அதர்டன் ஆகியோர் இந்தியாவின் துபாய் அட்டவணையை விமர்சித்தனர். அதேபோல தென்னாப்பிரிக்கா வீரர் வான் டர் டஸ்ஸென் மற்றும் ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களும் இந்தியாவிற்கு சாதகமான சூழல் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் உண்மையில் துபாயில் விளையாடுவது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதா என்ற கருத்துகுறித்து பேசியுள்ளார் சவுரவ் கங்குலி.

இந்தியா பாகிஸ்தானில் ஆடியிருந்தால் இன்னும் ஆபத்தான அணி..

இந்தியா துபாயில் ஆடுவது குறித்து பேசியிருக்கும் சவுரவ் கங்குலி, “பாகிஸ்தானில் இருக்கும் ஆடுகளங்கள் துபாயை விட சிறந்த சூழ்நிலையை வழங்குகின்றன. அங்கு இந்தியா ஆடியிருந்தால் இன்னும் பெரிய ஸ்கோர்களை அடித்து ஆபத்தான அணியாக இருந்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆழமான பேட்டிங் திறமையை கொண்டுள்ளது. அவர்களால் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும்” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிweb

கங்குலியின் பதில் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போனது. பாகிஸ்தானில் போட்டி நடைபெற்ற லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஸ்டேடியங்களில் நடைபெற்ற ஏழு போட்டிகளில், அணிகள் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 34.96 ரன்கள் எடுத்தன. அதில் 8 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும். மேலும் ஆறு போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு நேர்மாறாக, துபாய் மிகவும் சவாலான மைதானமாக இருந்துள்ளது. இங்கு அணிகள் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 28 ரன்கள் மட்டுமே எடுத்தன. மூன்று சதங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துபாயில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா அடித்த 249 ரன்களே அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com