2026 ஐபிஎல் மினி ஏலம் : கவனம் ஈர்க்கும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள்
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போதும், பல உள்ளூர் வீரர்கள் அதிகளவில் கவனம் பெறுகிறார்கள். அவ்வாறு பெரிதும் பேசப்படாத வீரர்களுக்கு மினி ஏலத்தில் மவுசு எப்படி இருக்கும் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
சர்வதேச தரத்தில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் மூலம், இந்தியாவின் பல உள்ளூர் வீரர்கள் மீது வெளிச்சம்படுவது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவிற்காக ஒரு சர்வதேச போட்டிகளில் கூட பங்கேற்காவிட்டாலும், பல உள்ளூர் வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆக்யுப் நபி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடப்பாண்டில் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் அலி என அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடி உள்ளதால் பல்வேறு அணிகள் இவரை எடுக்க, போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த அசோக் சர்மா, உத்தர பிரதேசத்தை சார்ந்த நமன் திவாரி ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக அதிக விலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவுக்கு 19 வயது மட்டுமே ஆகி இருந்தாலும், அதிரடியாக ரன் குவிக்கும் திறன் உள்ளதால் அதிக விலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தை சார்ந்த துஷார் ரஹேஜா மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த அபிஷேக் பதக் ஆகியோரும் பல்வேறு அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இதுதவிர உத்தர பிரதேசத்தை சார்ந்த பிரஷாந்த் வீர், மத்திய பிரதேசத்தை சார்ந்த ஆல் ரவுண்டர் மெக்னேஷ் யாதவ், கேரளாவை சார்ந்த சல்மான் நிசார், தமிழகத்தை சார்ந்த சன்னி சந்து, பஞ்சாப் அணியின் அன்மோல் ப்ரீத் சிங், சௌராஷ்டிரா அணியில் விளையாடிவரும் கிரெய்ன்ஸ் ஃபுலேட்ரா ஆகியோரும் இந்த ஏலத்தில் அதிகளவில் கவனம் பெற்றுள்ளனார்.

