INDvNZ |இறுதிப் போட்டிக்குள் நுழையப்போவது யார்..?

இந்திய அணி என்னதான் மிரட்டலான ஃபார்மில் அரையிறுதிக்குள் நுழைந்திருந்தாலும் நியூசிலாந்தைப் பார்த்தவுடனேயே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் அடித்துவிட்டது.
INDvNZ
INDvNZICC
அரையிறுதி 1: இந்தியா vs நியூசிலாந்து
மைதானம்: வான்கடே, மும்பை
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 15, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை

இந்தியா
போட்டிகள் - 9, வெற்றிகள் - 9, தோல்வி - 0, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 594 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 17 விக்கெட்டுகள்
விளையாடிய 9 போட்டிகளிலும் வென்று செம கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. முதல் 5 போட்டிகளையும் வரிசையாக சேஸ் செய்து வென்றிருந்த இந்திய அணி, கடைசி 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. அந்த 4 வெற்றிகளுமே குறைந்தபட்சம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வந்திருக்கின்றன.

Rohit Sharma | Ishan Kishan | Jadeja
Rohit Sharma | Ishan Kishan | JadejaShailendra Bhojak

நியூசிலாந்து
போட்டிகள் - 9, வெற்றிகள் - 5, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: ரச்சின் ரவீந்திரா - 565 ரன்கள்
சிறந்த பௌலர்: மிட்செல் சான்ட்னர் - 16 விக்கெட்டுகள்
முதல் 4 போட்டிகளையும் வென்று மிரட்டலாக உலகக் கோப்பையை தொடங்கியது நியூசிலாந்து. ஆனால் இந்தியாவுக்கு எதிராகத் தோல்வியடைந்தவர்கள், அடுத்தடுத்து 4 தோல்விகளை சந்தித்தார்கள். ஒருவழியாக கடைசிப் போட்டியில் இலங்கையை வென்று தட்டுத் தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.

இந்த உலகக் கோப்பையில் நேருக்கு நேர்

முடிவு: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
நியூசிலாந்து: 273 ஆல் அவுட்
இந்தியா: 274/6 (48 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: முகமது ஷமி (10-0-54-5)

மைதானம் எப்படி?

வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபூமியாக திகழ்ந்துவருகிறது. இந்த உலகக் கோப்பையில் நடந்த 4 போட்டிகளில் மூன்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றிருக்கின்றன. அந்தப் போட்டிகளில் முதலில் ஆடிய அணிகளின் ஸ்கோர்கள்: 399, 392, 357. நான்காவது போட்டியில் மேக்ஸ்வெல் மிரட்டலாக இரட்டைச் சதம் அடித்ததால் ஆஸ்திரேலியா சேஸ் செய்து வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸ் அளவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதில்லை. அதுவும் இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் காலகட்டத்தில் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. அதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே இந்தப் போட்டியில் டாஸ் மிகப் பெரிய அங்கம் வகிக்கும். டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

பிளாக் கேப்ஸை இந்த முறையாவது வெல்லுமா இந்தியா

இந்திய அணி என்னதான் மிரட்டலான ஃபார்மில் அரையிறுதிக்குள் நுழைந்திருந்தாலும் நியூசிலாந்தைப் பார்த்தவுடனேயே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் அடித்துவிட்டது. எப்பேர்ப்பட்ட அணியை வீழ்த்தினாலும், இவர்களுக்கு எதிராகவென்று வரும்போது இந்திய அணி ஐசிசி தொடர்களில் கோட்டை விட்டுவிடுகிறது. 2000 ஐசிசி நாக் அவுட் டிராஃபி, 2019 உலகக் கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் நியூசிலாந்திடம் தோற்றதாலேயே இந்தியா வெளியேறியது. சமீபத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் கூட அந்த அணிக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதிலும் குறிப்பாக அந்த 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் தோல்வியை இன்னும் இந்திய ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். போல்ட்டின் ஸ்விங்கில் மொத்தமாக காலியானது இந்தியா.

பும்ரா | ஷமி
பும்ரா | ஷமிShailendra Bhojak

ஆனால் இந்த முறை அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய அட்டாகிங் அணுகுமுறையால் கடினமான பவர்பிளே ஓவர்களில் எதிரணிகள் தாக்கம் ஏற்படுத்த முடியாததுபோல் பார்த்துக்கொள்கிறார். அவரால் கிடைக்கும் அந்தத் தொடர்க்கத்தை கோலி, ஷ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் நன்றாகப் பயன்படுத்தி மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சூர்யகுமார் யாதவ் வான்கடே மைதானத்தில் பல சிறப்பான இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். அதனால் இந்திய பேட்டிங் நிச்சயம் நம்பிக்கையுடன் இருக்கும். பந்துவீச்சைப் பற்றி சொல்லவே தேவையில்லை. உலகின் மிகச் சிறந்த பௌலிங் யூனிட்களுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது பும்ரா - சிராஜ் - ஷமி - குல்தீப் - ஜடேஜா கூட்டணி. ஹர்திக் பாண்டியா இல்லாதபோதும் ஒட்டுமொத்த அணியுமே சிறப்பாக செயல்படுவதால், இந்தியா பெரிதாக சிக்கல்களே சந்திக்கவில்லை. ஒருவேளை இந்தப் போட்டியில் அதுவே கூட இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம்.

அதேசமயம் நியூசிலாந்து அணியும் முழு நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை. லாதம், போல்ட் போன்ற சீனியர்கள் இன்னும் தங்கள் முழு திறனையும் வெளிக்காட்டவில்லை. முதல் 4 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்திய சான்ட்னர் சற்று ஓய்ந்து விட்டார். கான்வேவும் முதல் போட்டிக்குப் பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடவே இல்லை. ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறினால் நியூசிலாந்து அணி பெரும் சிக்கலை சந்திக்கவேண்டியிருக்கும். போல்ட், சௌத்தி, ஃபெர்குசன் என அவர்களின் வேகப்பந்துவீச்சுக் கூட்டணியும் இன்னும் சீராக செயல்படவில்லை.

இந்தியாவுக்கு எதிராக அவர்கள் வைத்திருக்கும் சமீபத்திய நல்ல ரெகார்ட் தான் இந்தப் போட்டிக்கு முன் அவர்களுக்கு இருக்கும் பெரிய நம்பிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com