INDvBAN | நான்காவது வெற்றியைக் குறிவைக்கும் இந்தியா..!

உலகக் கோப்பை அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே சதமடித்திருக்கிறார் ஹிட்மேன் ரோஹித். பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் ஹாட்ரிக்கை எதிர்ப்பார்க்கலாம்.
Rohit Sharma
Rohit SharmaManvender Vashist Lav
போட்டி 17: இந்தியா vs வங்கதேசம்
மைதானம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 19, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இந்தியா
போட்டிகள் - 3, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரோஹித் ஷர்மா - 217 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 8 விக்கெட்டுகள்
ஹோம் உலகக் கோப்பையை மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கும் இந்திய அணி, சேஸிங் செய்தே ஹாட்ரிக் வெற்றிகள் பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சேஸை கொஞ்சம் பதற்றமாகத் தொடங்கினாலும் அடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக சேஸ் செய்து வென்றது. பௌலர்களின் சிறப்பான செயல்பாட்டால், எதிரணிகள் பெரிய ஸ்கோர்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன

வங்கதேசம்
போட்டிகள் - 3, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது
சிறந்த பேட்ஸ்மேன்: முஷ்ஃபிகுர் ரஹீம் - 119 ரன்கள்
சிறந்த பௌலர்: ஷகிப் அல் ஹசன் - 5 விக்கெட்டுகள்
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நல்ல படியாக தொடரைத் தொடங்கிய வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. பேட்டிங், பௌலிங் இரண்டுமே இந்த இரண்டு போட்டிகளிலும் சுமாராகவே இருந்தது.

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

இந்திய அணியைப் பொறுத்தவரை நன்கு செட்டிலான லெவனாக இருக்கிறது. காய்ச்சலால் முதலிரு போட்டிகளிலும் ஆடாமல் இருந்த சுப்மன் கில் கடந்த போட்டியில் ஆடினார். அவர்போக மற்ற பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் அனைவருமே அணிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூரின் இடம் மட்டும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதல் போட்டியில் அஷ்வின் ஆடிய நிலையில், அடுத்த இரு போட்டிகளிலும் ஷர்துல் களமிறக்கப்பட்டார். ஆனால் இந்திய அணி அவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே அவர் 8 ஓவர்கள் தான் வீசியிருக்கிறார். அதனால் பயன்படுத்தப்படாத ஒரு வீரரை ஏன் வைத்திருக்கவேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இருந்தாலும் இந்திய அணி புனே மைதானத்தில் அவரோடு களமிறங்கும் என்றே கருதப்படுகிறது. பும்ரா, குல்தீப், ஜடேஜா போன்றவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிரணிகளுக்கு சவாலாக விளங்குவதால் ஷர்துலைப் பயன்படுத்துவது இந்தக் காலகட்டத்தில் பெரிய நெகடிவ் தாக்கத்தை எற்படுத்திவிடாது.

வரலாற்றை மீண்டும் அரங்கேற்றுமா வங்கதேசம்

இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் ஆடும்போது அந்நாட்டு ரசிகர்கள் 2007 உலகக் கோப்பை நினைவு கூர்வார்கள். இந்திய அணியை தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல், லீக் சுற்றில் இருந்தும் வெளியேற்றியது வங்கதேசம். அதை மீண்டும் தங்கள் அணி அரங்கேற்றவேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு எதிராக மோதிய 4 ஒருநாள் போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது வங்கதேச அணி. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் கூட இந்தியாவை தோற்கடித்தது அந்த அணி. அதனால் நம்பிக்கை இருக்கத்தானே செய்யும்!

அந்த 2007 உலகக் கோப்பை போட்டியில் அரைசதம் அடித்து இந்திய தோல்விக்கு வித்திட்ட ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகியோர் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் ஆடினால் தான் வங்கதேசத்தால் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முடியும். ஏனெனில், அந்த அணியில் இப்போது பல ஓட்டைகள் இருக்கின்றன. இன்னும் அவர்களது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை. அது அவர்களுக்குப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கலாம்.

மைதானம் எப்படி

புனே மைதானம் ஓரளவு பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கக் கூடியது. மைதானமும் சிறியது. அதனால் கண்டிப்பாக முதலில் பேட்டிங் செய்யும் அணி 300+ ஸ்கோர் எடுக்க வாய்ப்புண்டு. கடைசியாக 2021ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் 651 ரன்கள் குவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுதான் இந்த மைதானத்தில் ஆடப்படும் முதல் போட்டி.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

இந்தியா - ரோஹித் ஷர்மா: உலகக் கோப்பை அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே சதமடித்திருக்கிறார் ஹிட்மேன் ரோஹித். பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் ஹாட்ரிக்கை எதிர்ப்பார்க்கலாம்.


வங்கதேசம் - மெஹதி ஹசன் மிராஜ்: டாப் ஆர்டரில் பும்ராவை சமாளிக்கவேண்டிய சவால், மிடில் ஓவர்களில் இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைக்கவேண்டிய சவால் என மெஹதி ஹசன் மீதான பொறுப்புகள் ஏராளம் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com