2026 காமன்வெல்த் | முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ஜாண்டு குமார்.. யார் இவர்?
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் வெற்றிகரமாகத் தூக்கினார். இதன்மூலம் 130.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். (வெறும் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்). காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கத்தைப் பெற்ற ஜாண்டுகுமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், ”ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ள ஜாண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவரது சாதனை, அளவற்ற வலிமை மற்றும் தளராத உறுதியின் பிரதிபலிப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜாண்டு குமார், சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். குடும்பச் சூழ்நிலையால் தாமே காய்கறி விற்பனை செய்தும், ஆட்டோ ஓட்டியும் வந்துள்ளார். தன் பாரா பவர்லிஃப்டிங் கனவை நிறைவேற்றிக் கொள்ள, தான் வைத்திருந்த ஆட்டோவையே விற்றுப் பயிற்சிச் செலவுகளைச் சமாளித்துள்ளார்.
2017-இல் 'குண்டு எறிதல்' மற்றும் 'தட்டு எறிதல்' போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இவர், பின்னர் பவர்லிஃப்டிங் துறைக்கு மாறினார். தனது வெற்றி குறித்து ஜாண்டு குமார், "என் கழுத்தில் இந்தப் பதக்கம் தொங்கும் இந்தத் தருணத்தில், நான் வானத்தில் பறப்பது போன்ற உணர்வைப் பெறுகிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

