TROPHY வாங்க இந்தியா மறுப்பு! ‘கோப்பை திருடன்’ என விமர்சனம்! மோஹ்சின் நக்வியை அவமதித்த FANS!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிசிசிஐ எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணி 2026 ஆசியக்கோப்பை வென்றும் ஏசிசி தலைவர் மோஹ்சின் நக்வியிடமிருந்து டிராபி வாங்க மறுத்தது. பரிசளிப்பு விழா தாமதமாக, நக்வி மேடையில் வெறுமனே காத்தார். இந்திய ரசிகர்கள் ‘கோப்பை திருடன்’ என கோஷமிட்ட நிலையில், இது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2026 மகளிர் டி20 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. ஷபாலி வெர்மா 68 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 59 ரன்கள் என மிரட்ட, இந்தியாவின் ஸ்பின் ஜோடி ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா இருவரும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்தியா 183 ரன்கள் அடித்திருந்த நிலையில், இலங்கையால் 111 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
8வது முறையாக ஆசியாவின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மோஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பை வாங்க மறுப்பு தெரிவித்து மேடைக்கே வராமல் புறக்கணித்தது. இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்தியா நக்வியிடமிருந்து கோப்பை வாங்குமா? மோஹ்சின் கோப்பை வழங்க வருவாரா? என்ற குழப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஃபைனல் முடிவை எட்டுவதற்கு முந்தைய சில நிமிடங்களில் மைதானத்தில் ஏசிசி தலைவர் நக்வி தோன்றினார். பின்பு போட்டி முடிந்தபிறகு வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பை வழங்க மேடைக்கு வந்த அவர், நீண்ட நேரம் இந்திய அணிக்காக காத்திருந்தார். பொதுவாக ஆட்டம் முடிந்து 15-20 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கும் பரிசளிப்பு விழா, கோப்பையை யார் வழங்குவது என்பது குறித்த இழுபறி தொடர்ந்ததால் தாமதமானது.
பாகிஸ்தானின் மோஹ்சின் இடமிருந்து கோப்பை வாங்குவதில்லை என்ற உறுதியுடன் இருந்த இந்திய வீராங்கனைகள், பயிற்சியாளர்களுடனான நீண்ட நேர உரையாடலுக்கு பிறகு டிராபி வாங்க வரமாட்டோம் என தெரிவித்தனர். இந்தியாவின் முடிவால் ஏமாற்றமடைந்த பின்னர் ரன்னராக வந்த இலங்கை அணிக்கான பரிசுத்தொகையையும், பதக்கங்களையும் மட்டுமே நக்வி வழங்கினார். இந்திய வீராங்கனைகள் வருவார்கள் என மேடைக்கு அருகே ஏசிசி தலைவர் காத்திருந்தபோது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் ‘கோப்பை திருடன், கோப்பை திருடன் வந்துவிட்டான்’ என சத்தமிட்டனர். அதைப்பார்த்த நக்வி அதிர்ச்சி அடைந்தார்.
இந்திய மகளிர் அணியை போன்றே கடந்தாண்டு ஆசிய கோப்பை வென்றபோது இந்திய ஆடவர் அணியும் ஏசிசி தலைவர் மோஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பை வாங்க மறுப்பு தெரிவித்தது. அதற்கு பிறகு டிராபியை தன் கையோடே கொண்டுசென்றார் நக்வி. இந்தியா பலமுறை கோப்பையை கொண்டுவந்து தரவேண்டும் என கூறியபோது, இந்தியாவிற்கு டிராபி வேண்டுமானால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று நக்வி தீர்க்கமாக தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான் தற்போது இந்திய ரசிகர்கள் கோப்பை திருடன் என நக்வியை விமர்சித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாத கும்பல் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பிறகே பிசிசிஐ இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடித்து வருகிறது.. ஒருபக்கம் இந்திய வீரர்களின் இச்செயலுக்கு ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் இது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லை என்றும், இதற்கு விளையாட போகாமலே இருந்திருக்கலாம் என்றும் எதிர்வினை கருத்துகளும் ரசிகர்களிடமிருந்து வைக்கப்பட்டுவருகின்றன..

