1977ல் இருந்து பின்தொடர்ந்த தோல்வி! முதல்முறையாக ஆஸி. அணியை வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய மகளிர்அணி!

ஆஸ்திரேலியா அணியை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி.
Ind vs Aus
Ind vs AusCricinfo

பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களான சினே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் இருவரும் கூட்டாக 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற இந்திய அணி ஜாம்பவான் அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. 1984ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

பந்துவீச்சில் மிரட்டிய சினே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர்!

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 1984ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் அலிஸா ஹீலி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் ஓவரிலேயே லிட்ச்ஃபீல்டை ரன் அவுட்டாக்கி டக்கவுட்டில் வெளியேற்றிய இந்திய அணி அதிர்ச்சி கொடுத்தது. அடுத்து களத்திற்கு வந்த எலிஸா பெர்ரியை 4 போல்டாக்கி வெளியேற்றி கலக்கி போட்டார் பூஜா வஸ்த்ரகர். 7 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஆனால் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த மூனி மற்றும் தஹிலா மெஹ்ராத் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

Ind vs Aus
Ind vs Aus

50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்போட்ட இந்த ஜோடி மெல்ல மெல்ல அழுத்தத்திலிருந்து வெளியேறியது. ஆனால் மீண்டும் பந்துவீச வந்த பூஜா வஸ்த்ரகர் 40 ரன்களுடன் நிலைத்து நின்ற மூனியை வெளியேற்றி விக்கெட்டை வீழ்த்தினார். உடன் தஹிலாவை 50 ரன்னில் சினே ராணா வெளியேற்ற, கேப்டன் அலிஸா ஹீலியை 38 ரன்னுக்கு போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஆல்ரவுண்டர் தீப்திஷர்மா. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சினே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் இருவரின் பவுலிங் ஷோவாக இருந்தது. நல்ல நிலைமையில் இருந்த ஆஸ்திரேலியா திடீரென 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளும், சினே ராணா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

சதத்தை தவறவிட்ட மந்தனா! தண்ணி காட்டிய தீப்தி ஷர்மா!

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி மற்றும் மந்தனா இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. ஒருவழியாக ஷபாலியை 40 ரன்னில் வெளியேற்றிய ஜானசென் முதல் விக்கெட்டை எடுத்தார். சதமடிப்பார் என எதிர்ப்பார்த்த ஸ்மிரிதி மந்தனா 77 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இன்ஃபார்ம் பேட்டர்கள் இருவரும் வெளியேற அடுத்துவந்த ரிச்சா கோஸ் மற்றும் ஜெமிமா இருவரும், மந்தனா விட்ட இடத்திலிருந்து விளையாடினர். அடுத்தடுத்து அரைசதமடித்த இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிவிட்டது.

Smriti Mandhana
Smriti Mandhana

ரிச்சா கோஸ் 52 ரன்னிலும், ஜெமிமா 73 ரன்னிலும் வெளியேற அடுத்துவந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் உட்பட யஸ்திகா பாட்டியா இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தை இழுத்துபிடித்தது. 274 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் விழ எப்படியும் இந்தியா அடுத்த 30 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகிவிடும் என்று தான் எல்லோரும் எதிர்ப்பார்த்திருப்பார்கள்.

Deepti Sharma
Deepti Sharma

ஆனால் களத்திலிருந்த ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா அவருடைய பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் எடுத்துவந்தார். உடன் பூஜா வஸ்த்ரகரும் கைக்கோர்க்க 8ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்த இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டியது. ஒருவழியாக தீப்தியை 78 ரன்னிலும், பூஜாவை 47 ரன்னிலும் வெளியேற்றிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 406 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா!

187 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, எல்லிஸ் பெர்ரி மற்றும் தஹிலா இருவரின் அபாரமான ஆட்டத்தால் 206 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என சிறப்பான நிலையிலேயே இருந்தது. 72வது ஓவரில் முக்கியமான விக்கெட்டை எடுத்துவந்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கார், 73 ரன்களுடன் இருந்த தஹிலாவை போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஹர்மன். உடன் கேப்டன் ஹீலி மற்றும் ஹார்ட்னர் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாக மீதியிருக்கும் வேலையை கயாக்வத் மற்றும் சினே ரானா இருவரும் பார்த்துக்கொண்டனர். 206 ரன்னுக்கு 3 விக்கெட்டில் இருந்த ஆஸ்திரேலியா அடுத்த 55 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து 261 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சினே ரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Smriti Mandhana
Smriti Mandhana

75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. “2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்த ஆஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை” சந்தித்தது.

7 ஆண்டுகளாக ஒரு தோல்வி கூட இல்லை! டெஸ்ட்டில் கலக்கும் இந்தியா!

ind vs aus
ind vs aus

2014ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத இந்திய அணி, தற்போது தான் விளையாடிவருகிறது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகளில் டிரா மற்றும் தற்போது உள்நாட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் வெற்றிகள் என தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. இந்நிலையில் இந்திய அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

1977-ல் இருந்து தொடர்ந்த சோகம்! ஆஸிக்கு திருப்பி கொடுத்த இந்தியா!

1977ஆம் ஆண்டுக்கு முன்பு 10 அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் விளையாடியுள்ளன. அந்த போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றிபெறவில்லை. அதில் 4 போட்டியில் தோல்வியும், 6 போட்டியில் டிரா மட்டுமே இந்திய அணியால் செய்ய முடிந்தது.

ind vs aus
ind vs aus

இந்நிலையில் 1984-க்குப் பிறகு முதல்முறையாக இரண்டு அணிகளும் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் மோதின. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இருந்துவந்த ஆஸ்திரேலியா அணியை, ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் இந்தியாவில் வீழ்த்தி ஒரு தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com