2026 டி20 உலகக்கோப்பை அப்டேட்.. 2 வரலாற்று சாதனைகள் படைக்குமா இந்தியா?
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கவுள்ளது. சூர்யகுமார் மற்றும் கில்லின் ஃபார்ம் கவலைக்குரியதாக இருந்துவரும் நிலையில், இந்தியா அடுத்தடுத்து கோப்பை வென்று சாதிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
10வது டி20 உலகக்கோப்பை தொடரானது இலங்கை மற்றும் இந்தியாவில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கவிருக்கிறது. 20 அணிகள் பங்குபெற்று விளையாடும் 55 போட்டிகள் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக களம்காணவிருக்கிறது.
2026 உலகக்கோப்பை வெல்லும் இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பார்க்கப்படும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன்களான சூர்யகுமார் மற்றும் கில்லின் பேட்டிங் ஃபார்ம் இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்துவரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யா, கில் இரண்டு வீரர்களும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பந்துவீச்சில் குறைகள் இருப்பதுபோல் தோன்றினாலும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் நல்ல ரிசல்ட்டை கொடுத்துவருகின்றனர். ஃபீல்டிங்கிலும் பெரிய தவறுகளை செய்வதை இந்தியா குறைத்துவருகிறது. கில், சூர்யா இருவரும் ஃபார்மிற்கு திரும்பிவிட்டால் இந்திய அணி வலுவான அணியாக மாறிவிடும்.
அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இருப்பதால் கேப்டன், துணைக்கேப்டன் இருவரும் ஃபார்மிற்கு திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் கௌதம் கம்பீர் இருக்கிறார். இந்தசூழலில் 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை பிளேயிங் 11 உறுதிப்படாத நிலையில் கடைசி நேரத்தில் எதுவும் மாற்றம் இருக்குமா என்ற குழப்பமும் இருக்கிறது.
டி20 உலகக்கோப்பையை இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக வென்றதில்லை என்பதாலும், 3 முறை எந்த அணியும் வென்றதில்லை என்பதாலும் இரண்டு சாதனைகளை இந்தியா நிகழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சொந்தமண்ணில் இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

