தோல்வியிலிருந்து தப்பித்த இந்தியா! சதமடித்து “ஸ்ரீ ராமருக்கு” டெடிகேட் செய்த கே.எஸ்.பரத்!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 489 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி, தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்து போட்டியை சமன்செய்து அசத்தியது.
ks bharat sri ram celebration
ks bharat sri ram celebrationX

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி, 3 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டி 4 நாள் கொண்ட போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்றது. அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், சப்ராஸ்கான், கேஎஸ் பரத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தின் தொடக்க ஜோடியான அலெக்ஸ் மற்றும் ஜென்னிங்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் தடுமாறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் அரைசதம் அடித்து அசத்த, 20 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஜென்னிங்ஸ் சதமடித்து அசத்தினார். அலெக்ஸ் 73 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 154 ரன்கள் அடித்தும் வெளியேற, தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் போஹன்னன் 182 பந்துகளில் 124 ரன்கள் விளாசி வலுவான டோட்டலுக்கு வழிவகுத்தார். முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 553 ரன்கள் குவித்த லயன்ஸ் அணி டிக்ளர் செய்தது.

50-6 என சொதப்பிய இந்தியா.. தாங்கிப்பிடித்த பட்டிதார்!

தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே வைத்து இங்கிலாந்து லயன்ஸ் பவுலர்கள் சம்பவம் செய்தனர். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லயன்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்களை 0, 4, 4, 0 என அடுத்தடுத்து வெளியேற்ற, 50 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது.

rajat patidar
rajat patidar

என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜத் பட்டிதார், 19 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 151 ரன்கள் சேர்க்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 227 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.

rajat patidar
rajat patidar

பின்னர் தங்களுடைய 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 163/6 என்ற நிலையில் டிக்ளார் செய்ய, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 489 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியை காப்பாற்றிய சாய் சுதர்சன், கேஎஸ் பரத்!

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனை 0 ரன்னிலும், கடந்த இன்னிங்ஸில் சதமடித்த ரஜத் பட்டிதாரை 4 ரன்னிலும் வெளியேற்றிய லயன்ஸ் அணி, இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. 6 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா ஏ அணி தடுமாற, மறுமுனையில் பொறுப்பை எடுத்துக்கொண்ட சாய் சுதர்சன் 208 பந்துகளை சந்தித்து நிலைத்து நின்று விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினார்.

ks bharat
ks bharat

97 ரன்கள் எடுத்திருந்த போது சாய் சுதர்சன் வெளியேற, அவரை தொடர்ந்து வந்த கேஎஸ் பரத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 165 பந்துகளில் 116 ரன்கள் அடித்து அசத்தினார். 4ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 426 ரன்கள் சேர்த்த இந்திய அணி தோற்கவேண்டிய போட்டியை சமன்செய்து முடித்துவைத்தது.

ராமரை போல் வில்லேந்தி செலப்ரேட் செய்த கேஎஸ் பரத்!

இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த கேஎஸ் பரத், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இத்தகைய சூழலில் லயன்ஸ் அணிக்கு எதிராக சதமடித்த அவர், தற்போது இந்தியாவின் பேசுபொருளாக இருந்துவரும் ஸ்ரீ ராமரை அவருடைய வெற்றிக்கு அழைத்தார்.

சதத்தை நிறைவு செய்த பரத், ஸ்ரீ ராமரை போல் வில்லேந்தி அம்பு விடுவதை போல் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். நாளை அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அவருடைய இந்த செலப்ரேசன் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com