’அடுத்த 48மணிநேரம் பேச முடியாது’-வெளியான மருத்துவ அறிக்கை; உண்மையில் மயங்க் அகர்வாலுக்கு நடந்ததென்ன?

”இன்னும் 48 மணி நேரத்திற்கு மயங்க் அகர்வாலால் பேச முடியாது” என கர்நாடக அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால்இன்ஸ்டா, ட்விட்டர்

விமானத்தில் பாதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணி கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், திரிபுரா அணியுடன் வெற்றிபெற்ற பிறகு, தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல நேற்று (ஜன.30) விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து அவசரமாக இறக்கப்பட்டு, அகர்தலாவில் உள்ள ஐ.எல்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போதும் சிகிச்சையில் உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மயங்க் அகர்வால்

இதுகுறித்து நேற்று மாலை அம்மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ”மயங்க் அகர்வால் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிப்பு குறித்து மயங்க் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “நான் இப்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். திரும்பி வரத் தயாராகி வருகிறேன். உங்கள் அனைவருடைய அன்பான பிரார்த்தனை மற்றும் ஆதரவிற்கு நன்றி” என அதில் தெரிவித்துள்ளார்.

மயங்க் அகர்வால்
விமானப் பயணத்தில் திடீர் உடல்நிலை பாதிப்பு: ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால்!

கர்நாடக அணியின் மேலாளர் பேட்டி

உண்மையில் மயங்க் அகர்வாலுக்கு நடந்தது என்ன என்பது குறித்து கர்நாடக அணியின் மேலாளர் ரமேஷ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நேற்று நாங்கள் விமானத்தில் புறப்படத் தயாரானோம். அப்போது மயங்கிற்கு தாகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தன்னுடைய இருக்கைக்கு முன்பிருந்த பாட்டில் தண்ணீரைக் எடுத்துக் குடித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்தத் தண்ணீரைத் துப்பிய நிலையிலும், எரிச்சல் குறைந்தபாடில்லை. இதன்பின் விமானப் பணிப்பெண்ணிடம் விஷயத்தைக் கூற, உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருடைய உதட்டில் வீக்கமும் காயமும் இருப்பதால், அவர் இன்னும் 48 மணி நேரத்திற்குப் பேச முடியாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மயங்க் அகர்வால் தரப்பில் டெல்லி காவல் துறையிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகல் ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்.. உண்மையான காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com