கைக்குலுக்கி கொண்ட IND-PAK ஹாக்கி வீரர்கள்.. கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இரண்டு அணி வீரர்களும் பரஸ்பரம் ஹைஃபை செய்துகொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்தனர்.
ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி ஆப்ரேசன் சிந்தூரின் ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் எதற்காக கைக்குலுக்க வேண்டும் என்று தெரிவித்ததும் பேசுபொருளாக மாறியது.
தொடர்ந்து இந்திய ஆண்கள் அணி கைக்குலுக்க மறுத்ததை போலவே, மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கி கொள்ளவில்லை..
கைக்குலுக்கி கொண்ட ஹாக்கி வீரர்கள்..
கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுப்பது விளையாட்டு மரபுக்கு எதிரானது என பல நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், தற்போது இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் கைக்குலுக்கி கொண்ட சம்பவம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜோகூர் சுல்தான் கோப்பையில் 21 வயதுக்குட்பட்ட இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்கள், தங்களுடைய சகவீரர்களான பாகிஸ்தான் வீரர்களுடன் ஒருவரை ஒருவர் ஹைஃபை செய்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-3 என இரண்டு அணிகளும் சரிசமமான பலத்தை காட்டின.
இந்தியா-பாகிஸ்தான் U-21 ஹாக்கி அணிகள் ஹை ஃபைவ்களைப் பகிர்ந்து கொண்டது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பிசிசிஐயை நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.