முதல் முறை.. வாகை சூடினார் ஸ்ரேயாஸ்.. Zim. எதிரான தொடரை வென்று அசத்தல்!
அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டி, இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில், 18 பந்துகளில் அரைசதமடித்து உலகசாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, இந்த முறை ஏமாற்றினார். அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதில் 3 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். மறுபுறம் அபிஷேக்கும் 8 ரன்களில் ஏமாற்ற, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ், திலக் வர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இஷான் கிஷன் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் மூலம் 81 எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இணையாக துணை கேப்டன் திலக் வர்மாவும் ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். கேப்டன் ஸ்ரேயாஸ் தனது பங்குக்கு 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் ரிங்கு சிங் 12 ரன்கள், ஷிவம் துபே 6* ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.
பின்னர், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், எவரும் நிலைத்து நின்று ஆடாததால், அவ்வணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியில் மருமணி 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்களும், யாஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஷ் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக தொடரை வென்றுள்ளது. இதற்கு முன்பு, சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களை அவரது தலைமையிலான இந்திய அணி இழந்திருந்தது.

