இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்.. 0-3 வரலாற்று தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோல்வி கண்டது. இன்று முதல் டி20 போட்டியில் இந்தியா பழிதீர்க்கும் முயற்சியில் களம் இறங்குகிறது. 2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் செயல்திறனை கணிக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் 2024ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என சொந்தமண்ணில் இழந்த இந்தியா, வரலாற்று தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி அவர்களின் 100% வலுவான அணி இல்லாமலேயே இந்தியாவை 3-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தது. இந்திய மண்ணில் இந்தியாவை 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்வது அதுவே முதல்முறையாகும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, 24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷை சந்தித்தது. இந்த வரலாற்று தோல்விக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி பழிதீர்க்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இன்று பகல் 12 மணிக்கு நடக்கும் முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளதா?
இந்தியாவிற்கு எப்போதும் சவால் அளிக்கக்கூடிய அணியாகவே இதுவரை நியூசிலாந்து இருந்துள்ளது. ஒருபக்கம் ஆஸ்திரேலியா தான் இந்தியாவை முக்கியமான தருணங்களில் தோற்கடித்தது என்று சொல்லப்பட்டாலும், நியூசிலாந்து அணி 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, சொந்தமண்ணில் இந்தியாவை 0-3 என ஒயிட்வாஷ் செய்தது என பல இதயம் உடைக்கும் தோல்விகளை நியூசிலாந்து கொடுத்துள்ளது.
டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் நியூசிலாந்து அவர்களின் சொந்தமண்ணில் வலுவான அணியாகவே இருந்துள்ளது. 1968ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்து மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதுவே இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
அதற்குபிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் நியூசிலாந்து மண்ணில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்லமுடிந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை தோனி தலைமையிலான இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி வென்றிருக்கிறது என்றாலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

