இந்திய சுழலில் சரண்டர் ஆனது இங்கிலாந்து பாஸ்பால் அட்டாக்.. புதிய சாதனை படைத்தார் குல்தீப் யாதவ்!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
குல்தீப் யாதவ், ரோகித் சர்மா
குல்தீப் யாதவ், ரோகித் சர்மாட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று (மார்ச் 7) இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸைத் தொடக்கிய ஜாக் க்ரெவ்லே மற்றும் டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்தனர். எனினும் 27 ரன்கள் எடுத்திருந்த டக்கெட்டின் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய ஆலி போப்பையும் குல்தீப் 11 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அடுத்து சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ஜாக் க்ரெவ்லேயையும் அவரே போல்டாக்கினார். பின்னர் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவை 29 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸை டக் அவுட் முறையிலும் வீழ்த்தி, இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்தினார் குல்தீப் யாதவ்.

அவருடைய விக்கெட் வேட்டையாலும் மாயஜால சுழற்பந்துவீச்சாலும் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது. மேலும் குல்தீப் யாதவிற்குத் துணையாக 100வது டெஸ்ட் போட்டியில் களம் கண்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் தன் பங்குக்கு 4 விக்கெட்களை வேட்டையாடினார். ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் அவ்வணி இறுதியில் 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தியதன்மூலம் புதிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அதாவது, டெஸ்ட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். அவர், இந்தச் சாதனையை 1,871 பந்துகளில் எடுத்துள்ளார். அவர் மொத்தம் 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்து அக்சர் படேல் 2,205 பந்துகளிலும், 3வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா 2,520 பந்துகளிலும் 50 விக்கெட்களை எடுத்துள்ளனர். தவிர, டெஸ்ட் போட்டியில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டையும் பெற்றார். குறைந்தபட்சம் 50 விக்கெட்களை வீழ்த்தியதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 36.8 ஆக உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஜார்ஜ் லாக்மேன் 34.1 ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளார். அதுபோல் டெஸ்ட் போட்டிகளில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்தவர் பட்டியலில் குல்தீப் யாதவ் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் பால் ஆடம்ஸ் 134 விக்கெட்களுடன், இங்கிலாந்து வீரர் ஜானி வார்டிலி 102 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளனர். அதுபோல், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஜோ ரூட் 8வது முறையாக ஆட்டமிழந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் தலா 8 முறை இவருடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றைய போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தியன்மூலம், 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் 511 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 584 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கவீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக தொடக்கம் அமைத்து கொடுத்தனர். 3 சிக்ஸர், 5 பவுண்டர்களுடன் அரைசதம் விளாசிய ஜெஸ்வால் 57 ரன்களில் பஷிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மாவும் 25 ஆவது ஓவரில் 77 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் 50, கில் 15 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com