புதிய சாதனை படைத்த அஸ்வின்-ஜடேஜா ஜோடி; பாஸ்பால் அட்டாக் விளையாடி இங்கிலாந்தையே மிரட்டிய ஜெய்ஸ்வால்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின் - ஜடேஜா ஆகியோர் புதிய சாதனை படைத்தனர்.
அஸ்வின், ஜடேஜா, ஜெய்ஸ்வால்
அஸ்வின், ஜடேஜா, ஜெய்ஸ்வால்ட்விட்டர்

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்று (ஜன.25) ஐதராபாத் மைதானத்தில் தொடங்கியது. ரோகித் சரமா தலைமையிலான இந்திய அணியில், முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேஸ்பால் முறையில் விளையாடும் இங்கிலாந்து

இதையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சமீபகாலமாக `பேஸ்பால்' எனப்படும் வேகமாக விளையாடி ரன்களைக் குவிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதிலும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20யைப் போன்று அதிரடியாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது.

சுழலில் திணறிய இங்கிலாந்து; 246 ரன்களுக்கு ஆல் அவுட்!

இதனால், இந்தப் போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமிருக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி முதல் இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு இரையாகியது. முதல் 50 ரன்களை விரைவாக எடுத்தாலும் அஸ்வின், ஜடேஜா பந்துவீச ஆரம்பித்ததும் ஆட்டமே தலைகிழாக மாறியது. தன்னுடைய முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் அந்த அணி, 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸும், அணியைச் சரிவிலிருந்து மீட்டுச் சென்றார். அவரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்களைக் கடந்தது. ஒருகட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார். இதற்குப் பின்பு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, அந்த அணி 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

புதிய சாதனை படைத்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி!

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனைக்கும் சொந்தக்காரர்களாகினர். இதன்மூலம் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கூட்டாக வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், கும்ப்ளே - ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளது. கும்ப்ளே - ஹர்பஜன்சிங் கூட்டணி ஒட்டுமொத்தமாக 54 போட்டிகளில் 501 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது. இந்த சாதனையை 50 டெஸ்ட்களிலேயே அஸ்வின் - ஜடேஜா கூட்டணி தற்போது முறியடித்துள்ளது. அவர்கள் தற்போது 506 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் 59 போட்டிகளில் 474 ஜாகீர்கான் - ஹர்பஜன் சிங் (474 விக்கெட்கள்) கூட்டணியும், அஸ்வின் - உமேஷ் யாதவ் (431), கும்ப்ளே, ஸ்ரீநாத் (412) உள்ளனர்.

இங்கிலாந்துக்கே ‘பேஸ்பால்’ முறையைக் கற்றுக்கொடுத்த ஜெய்ஸ்வால்!

சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி, பேஸ்பால் என்ற அதிரடியாக விளையாடும் யுக்தியுடன் செயல்பட்டு வருகிறது. அதே மனஓட்டத்துடன்தான் இன்றைய போட்டியிலும் இந்தியாவை எதிர்கொண்டது. ஆனால், அந்த அணி நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. மாறாக, இங்கிலாந்து அணி இந்திய அணி வீரர்க்ளின் சுழலில் சிக்கி ரன்கள் எடுக்கத் திணறியது. அதேநேரத்தில், இந்திய அணி அதற்கு நேர் எதிராக விளையாடியது.

குறிப்பாக, தொடக்க பேட்டராகக் களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர் முதல் நாள் முடிவின்படி, 70 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ஜெய்ஸ்வாலின் அதிரடியால் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டியது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கே பேஸ்பால் கிரிக்கெட்டைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் எனப் புகழும் அளவுக்கு ஜெய்ஸ்வால் விளையாண்டதாகவும் இதைக் கண்டு எதிரணியே திகைத்துப் போனதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்குத் துணையாக சுப்மன் கில் 14 ரன்களுடன் உள்ளார். முன்னதாக, ரோகித் சர்மா 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 4 நாட்கள் மீதமுள்ள நிலையில், நாளை முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது. 200 ரன்கள் முன்னிலை வகித்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதற்கு இந்திய அணி இரண்டு பேட்ஸ்மேன்கள் சதம் விளாச வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com