இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டி | சொந்தமண்ணில் வெளிநாட்டு அணியாக இந்தியா!
2026 ஆசிய விளையாட்டை முன்னிட்டு இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. விசேஷமாக, டெல்லியில் நடைபெறும் இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் தான் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட்; இந்திய அணி சொந்த நாட்டிலேயே அவே டீமாக விளையாடுகிறது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வித்தியாசமான முறையில், இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாடுகிறது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாக செயல்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் போதிய மைதான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்களது சொந்தப் போட்டிகளை இந்தியாவில் உள்ள டேராடூன், கிரேட்டர் நொய்டா, லக்னோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வருகின்றனர். இதுவரை பிற நாடுகளை இந்தியாவில் வைத்து எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், முதல்முறையாக இந்திய அணியையே டெல்லியில் விருந்தினராக உபசரிக்க உள்ளது. இதன்மூலம் இந்திய அணி தனது சொந்த நாட்டிலேயே 'அவே டீம் (away team)' ஆக விளையாடவுள்ளது.
செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

