முதல்முறை.. சொந்த மண்ணில் வெளிநாட்டு அணியாக விளையாடப் போகும் இந்தியா.. எப்படி சாத்தியம்?
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வித்தியாசமான முறையில், இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாட உள்ளது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாகச் செயல்பட உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் போதிய மைதான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்களது சொந்தப் போட்டிகளை இந்தியாவில் உள்ள டேராடூன், கிரேட்டர் நொய்டா, லக்னோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வருகின்றனர். இதுவரை பிற நாடுகளை இந்தியாவில் வைத்து எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், முதல்முறையாக இந்திய அணியையே டெல்லியில் விருந்தினராக உபசரிக்க உள்ளது. இதன்மூலம் இந்திய அணி தனது சொந்த நாட்டிலேயே 'அவே டீம் (away team)' ஆக விளையாடவுள்ளது. இந்த சர்வதேச டி20 தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

