அதிர்ச்சி.. WTC புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்த இந்தியா!
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் 0-2 என தோல்வியடைந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. இங்கிலாந்து தொடரை சமன் செய்தாலும், இந்த தோல்வி இந்திய அணியின் நிலையை பாதித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன்செய்திருந்தாலும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்தமண்ணில் இழந்த இந்திய அணி புள்ளிப்பட்டியலில் சரிவை கண்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில் தலைமையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன்செய்தது. இந்திய அணியில் பல குறைகள் இருந்தாலும் இங்கிலாந்து போன்ற ஒரு அணியை அவர்களின் சொந்தமண்ணில் சென்று டெஸ்ட் தொடரை சமன்செய்தது சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்தசூழலில் சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, இரண்டிலும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸில் முன்னிலை பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 124 ரன்களை சேஸ் செய்யமுடியாமல் முதல் டெஸ்ட்டில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று 0-2 என இந்திய மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது.
இதன் எதிரொலியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன.

