100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. வீறுநடை போடும் இந்திய அணி.. பரிதாப நிலையில் இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 100 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து
இந்தியா-இங்கிலாந்துCricinfo

நடப்பு உலகக்கோப்பையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் லக்னோ ஆடுகளத்தில் இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மந்தமான திரும்பும் பிட்ச்சான லக்னோவில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

5 போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் மட்டுமே செய்து வெற்றிபெற்றுள்ள இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இதற்கு முன் முதல் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுவந்த தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் சொதப்பியது. ஒருவேளை இந்தியாவும் அப்படி சொதப்புமா இல்லை சிறப்பாக செயல்படுமா என தொடங்கப்பட்ட போட்டியில், இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இங்கிலாந்து பவுலர்கள்!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எதிராக ஒரு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இங்கிலாந்து பவுலர்கள், விரைவாகவே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். சுப்மன் கில்லை 9 ரன்னில் க்றிஸ் வோக்ஸ் போல்டாக்கி வெளியேற்ற, அதற்கு பிறகு களமிறங்கிய விராட் கோலிக்கு அடுத்தடுத்து டாட் பாலாக வீசி அழுத்தம் கொடுத்த டேவிட் வில்லி, 9 பந்துகளை சந்தித்திருந்த கோலியை 0 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, எப்போதும் போல களத்திற்கு வந்ததும் பவுன்சரில் அவுட்டாகிவிட்டு ஜாலியாக வெளியேறினார் ஸ்ரேயாஸ் ஐயர். 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, கேப்டன் ரோகித் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சரிவிலிருந்து மீட்க போராடினர்.

Rahul - Rohit
Rahul - Rohit

ஐபிஎல்லில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவதால் மைதானத்தை நன்கு அறிந்திருந்த கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு அதிரடியாக தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, மீண்டும் வில்லனாக பந்துவீச வந்த டேவிட் வில்லி 58 பந்துகளை சந்தித்து 39 ரன்களுடன் நிலைத்து நின்ற ராகுலை வெளியேற்றினார். அதற்கு பிறகு சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்த, உடன் கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடினார்.

2வது முறையாக சதத்தை தவறவிட்ட ரோகித்! காப்பாற்றிய சூர்யா!

101 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மாவை, 87 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் அடில் ரசீத். முக்கியமான கட்டத்தில் கேப்டன் வெளியேற, அதற்கு பிறகு வந்த ஜடேஜா மற்றும் ஷமி இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய இங்கிலாந்து அணி போட்டிக்குள் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியது.

Suryakumar
Suryakumar

பின்னர் பும்ராவுடன் கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் போட்டியை காப்பாற்றும் ஒரு இன்னிங்ஸை விளையாடினார். நிதானமாக விளையாடிய ஸ்கை 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டி 49 ரன்கள் இருந்த போது மீண்டும் பந்துவீச வந்த வில்லி சூர்யாவையும் வெளியேற்றினார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

rohit sharma
rohit sharma

இந்த உலகக்கோப்பையில் ஏற்கனவே ஒரு சதத்தை பதிவுசெய்திருக்கும் கேப்டன் ரோகித், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக 87 ரன்களில் சதத்தை தவறவிட்டுள்ளார் ரோகித் சர்மா. 230 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கி விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி.

230 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 30 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. மாலன் 16 ரன்னிலும் ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை பும்ரா எடுத்த நிலையில், அடுத்து வந்த முகமது சமியும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், பேரிஸ்டோவ் 14 ரன்னிலும் ஷமி ஓவரில் க்ளின் போல்ட் ஆகினர். இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சரிவை சந்தித்த இங்கிலாந்து அணி 129 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4, பும்ரா 3, குல்தீப் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வீறுநடை போடும் இந்திய அணி.. தொடர்தோல்வியில் இங்கிலாந்து 

இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புள்ளி பட்டியலில் தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு மீண்டும் வந்தது. 5வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 1987 உலகக்கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி 1992 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 முறை தோல்வியை சந்தித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com