U19 WC | வாழ்வா, சாவா நிலை.. பாகி.யைப் பந்தாடிய இந்தியா.. அரையிறுதியில் ஆப்கானுடன் மோதல்!
யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, பிப்ரவரி 4ஆம் தேதி, இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை அரையிறுதிப் போட்டியில் சந்திக்கிறது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U-19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன. இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சூப்பர் 6 குரூப் 1-ல் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் யு19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் சூப்பர் 6 குரூப் 2-இல் முதலிடம் பிடித்த இங்கிலாந்து யு19 அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 4வது அரையிறுதி அணி யார் என்ற இடத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. வாழ்வா, சாவா என்கிற நிலையில் இவ்விரு அணிகளும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 30 ரன்களிலும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி தொடக்கத்திலேயே சரிவைக் கண்டது.
என்றாலும் வேதந்த் திரிவேதி பாகிஸ்தான் பந்துவீச்சைத் தாக்குப் பிடித்து நின்றதுடன், அரைசதமும் அடித்தார். அவர் 68 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் இந்திய அணி 200 ரன்களையாவது எடுக்குமா என எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசிக்கட்டத்தில் ஆர்.எஸ்.அம்பரீஷ் (29 ரன்கள்), கனிஷ்க் செளகான் (35 ரன்கள்), கிளென் படேல் (21 ரன்கள்) ஆகியோரின் சிறப்பாக ஆடினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுப்கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பின்னர், 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஹம்சா ஷாகூர் 42 ரன்களும் உஸ்மான் கான் 66 ரன்களும், கேப்டன் பர்கான் யூசுப் 38 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பியதால், அந்த அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஆயூஷ் மாத்ரே மற்றும் கிளென் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

