Pickleball World Cup| Oct. 27 அமெரிக்காவில் தொடக்கம்.. முதல்முறையாக இந்தியா பங்கேற்பு!
2025ஆம் ஆண்டுக்கான ஊறுகாய் பந்து உலகக் கோப்பை (Pickleball World Cup) அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் தொடங்க உள்ளது.
அமெரிக்காவில் ஊறுகாய் பந்து உலகக் கோப்பை
2025ஆம் ஆண்டுக்கான ஊறுகாய் பந்து உலகக் கோப்பை (Pickleball World Cup) அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் தொடங்க உள்ளது. இது, 2வது உலகக் கோப்பையாகும். நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்ற உள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 68 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தப் போட்டியில், ஒரு குழுவிற்கு நான்கு நாடுகள் வீதம் 17 குழுக்கள் (குழு A முதல் குழு Q வரை) இடம்பெறும். இந்த ஆண்டுக்கான முதலிடத்தில் அமெரிக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, பெரு மற்றும் சீன தைபே ஆகியவை உள்ளன, கடந்த ஆண்டு பதக்கம் வென்ற அணிகள் புவேர்ட்டோ ரிக்கோ, பெரு மற்றும் சீன தைபே ஆகும். மீதமுள்ள பிரதிநிதிகள் தங்கள் கண்டப் பகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டு நாடுகளுக்கு மேல் ஒரே குழுவில் இடம்பெற வாய்ப்பில்லை. ஒவ்வொரு குழுவும் 6 போட்டிகளைக் கொண்ட ஒரு சுற்றுப் போட்டியில் விளையாடும். ஒவ்வொரு போட்டியும் ஆறு ஆட்டங்களைக் கொண்டிருக்கும். அவை ரேலி ஸ்கோரிங் முறையின்கீழ் 15 புள்ளிகளுக்கு விளையாடப்படும், இதில் இரண்டு பேர் வெற்றி பெற வேண்டும். போட்டியிடும் ஆறு வடிவங்களில் பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் 1, கலப்பு இரட்டையர் 2, பெண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் ஆகியவை அடங்கும். குழு நிலைகளுக்குப் பிறகு, மொத்தம் 34 அணிகள் நாக் அவுட் கட்டத்திற்கு முன்னேறும், அங்கு அனைத்து போட்டிகளும் 21 புள்ளிகளுக்கு விளையாடப்படும்.
14 பேர் கொண்ட இந்திய குழுவினர்
68 நாடுகளின் பங்கேற்புடனும், முதல்முறையாக இந்தியாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், 2025ஆம் ஆண்டு நடைபெறும் ஊறுகாய் பந்து உலகக் கோப்பை, விளையாட்டின் சர்வதேச பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைய உள்ளது. இதற்காக14 பேர் கொண்ட இந்திய குழுவினர் தயார் செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில், இந்திய பிக்கிள்பால் சங்கத்தின் (IPA) தலைவராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் சூர்யவீர் சிங் புல்லர் செயல்பட உள்ளார். அதேபோல், இந்த பிக்கிள்பால் உலகக் கோப்பையில், இந்திய அணியின் பிரசாரத்திற்கு அவாடா குழுமம் அதிகாரப்பூர்வ ஆதரவாளராகச் செயல்படும் என்று இந்திய பிக்கிள்பால் சங்கம் (ஐபிஏ) அறிவித்துள்ளது.
ஆண்கள் ஒற்றையர்: அமன் படேல்
பெண்கள் ஒற்றையர்: அம்ரிதா முகர்ஜி
ஆண்கள் இரட்டையர்: தீரன் படேல் & சூரஜ் தேசாய்
பெண்கள் இரட்டையர்: ரக்ஷிகா ரவி & சிந்தூர் மிட்டல்
16 வயதுக்குட்பட்ட பிரிவு
பெண்கள்: ஆய்ரா கண்ணா & அனுஷ்கா சபாரியா
சிறுவர்கள்: வீர் ஷா & விவான் படேல்
50+ வகை
ஆண்கள் இரட்டையர்: சூர்யவீர் சிங் புல்லர் & நிட்டன் கீர்த்தனே
பெண்கள் இரட்டையர்: பேலா கோட்வானி & சுஜய் பரேக்
ஊறுகாய் பந்து என்பது என்ன?
ஊறுகாய் பந்து (Pickleball) என்பது டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் ஒரு கலவையாகும். என்றாலும், அதன் விதிகளில் இருந்து வேறுபட்டது. அத்துடன் இந்த பந்தின் எடையும் குறைவு. இவ்விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டிலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் முறை உள்ளது. இது, டென்னிஸ் மைதானத்தின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் விளையாடப்படுகிறது. இதன் வலையும் டென்னிஸ் வலையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. 1965ஆம் ஆண்டு சியாட்டிலுக்கு அருகிலுள்ள பெயின்பிரிட்ஜ் தீவில் ஜோயல் பிரிட்சார், பில் பெல் மற்றும் பார்னி மெக்கல்லம் ஆகியோர் விடுமுறையின்போது இவ்விளையாட்டை தங்கள் குழந்தைகளுக்காக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஜோயலின் மனைவி, ’ஊறுகாய் பந்து’ எனப் பெயரிட்டதாலேயே இந்த விளையாட்டு அப்பெயரால் அழைக்கப்படுவதாக காரணம் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கு, 2005-ல் அசோசியேஷன் உருவாக்கப்பட்டது. இவ்விளையாட்டு, இந்தியாவில் 2006-ல் கொண்டுவரப்பட்டது. சுனில் வால்வல்கர் என்பவர் அதை இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளார். தற்போது இவ்விளையாட்டு, இந்தியாவின் 16 மாநிலங்களில் விளையாடப்படுகிறது. நம் நாட்டில் மட்டும் இவ்விளையாட்டை, 3,000 பதிவு செய்யப்பட்ட வீரர்கள் விளையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.