”ஐபிஎல் தொடங்கிய பிறகு ஏன் ஒரு டி20 உலகக்கோப்பையைக் கூட வெல்லவில்லை”- வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

ஐபிஎல்லுக்குப் பிறகு இந்திய அணி ஒரு டி20 உலகக்கோப்பையைக்கூட வெல்லவில்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
வெங்கடேஷ் பிரசாத்
வெங்கடேஷ் பிரசாத்கோப்புப் படம்

வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம்படை பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பலம் வாய்ந்த இந்திய அணி, பலவீனமான வெஸ்ட் அணியிடம் தொடர்ந்து தோல்வியுற்று வருவது ரசிகர்களிடம் மட்டுமின்றி, கிரிக்கெட் வல்லுநர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில், ”மிகமிக சுமாரான இந்தச் செயல்பாடுகளை ஒதுக்கி தள்ளுவதில் அர்த்தமில்லை. 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதற்குப் பின் நடைபெற்ற 7 டி20 உலகக் கோப்பைகளை நாம் ஒருமுறைகூட வெல்லவில்லை. இதில் ஒருமுறை மட்டுமே இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளோம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற அதிகப்படியான பசி உங்களுக்கு இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதுபோல் வெஸ்ட் இண்டீஸுக்கான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர், ”இப்போட்டியில் சாஹல் 16வது ஓவரில் 2 விக்கெட்களை எடுத்து தம்முடைய 3வது ஓவரில் போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளுடன் சரிந்த அந்த சமயத்தில் அவர் மீண்டும் பந்து வீசவில்லை. அதனால் 9 மற்றும் 10வது களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாகக் கையாண்டு விட்டனர். இதுபோன்ற தருணங்களில் பாடப் புத்தக விதிமுறைகளைப் பின்பற்றாமல் புத்திசாலியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சமீப காலங்களாகவே இந்தியாவின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக அவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com