இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
கான்பூர் கிரீன் பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, முதல் நாளில் தொடங்கப்பட்டு 35 ஓவர்கள் விளையாடிய நிலையில் மழையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் இரண்டாவது நாளுக்கு சென்றநிலையில், இரண்டாவது நாள் முழுவதும் ஆடமுடியாமல் போக மூன்றாவது நாளுக்கு சென்றது.
3வது நாளிலாவது போட்டி நடைபெறும் என எதிர்ப்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்றாவது நாளான இன்று காலையிலிருந்து மழை இல்லாதபோதிலும், மைதானத்திலிருந்த அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக ஆட்டம் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான்காவது நாளிலாவது போட்டி நடத்தப்படுமா அல்லது முழுவதுமாக கைவிடப்படுமா என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டி ரத்துசெய்யப்பட்டால் இந்தியா 1-0 என தொடரை கைப்பற்றும்.