IND Vs SA T20 | 3ஆவது போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா? மைதானம் எப்படி?
இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா இந்தியா?
இந்திய-தென்னாப்பிரிக்க இடையேயான 3ஆவது-டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் இருஅணிகளும் தலா 1-1 என வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் பலம் பெறுமா இந்தியா?
இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா முதல் இரு போட்டிகளில் அதிரடியாக ஆட ஆரம்பித்தாலும் அதன்பிறகு நிலைக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
சுப்மன் கில் கடந்த 14 சர்வதேச டி20 போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.. 23.90 சராசரியுடன் 142.93 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி மொத்தமாகவே 263 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் 4 ரன்கள், அடுத்த போட்டியில் டக் அவுட் என சொதப்பினார். இவர் பேட்டிங்கில் பல்வேறு கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 17 சர்வதேச டி20 போட்டிகளில் 14.35 சராசரியுடன் 126.4 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி மொத்தமாகவே 201 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் 12 ரன்கள், அடுத்த போட்டியில் 5 ரன்கள் எடுத்து இந்த தொடரிலும் சோபிக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் பொறுப்புடன் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா மட்டும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்பு இன்றைய போட்டியில் அவசியமாக உள்ளது. எனவே இந்திய அணி பேட்டிங்கில் பலம் பெற்றால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்க முடியும்.
நம்பிக்கை தரும் வருண்
தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் சிறப்பாக இருந்த இந்திய பந்துவீச்சு, அடுத்த போட்டியில் ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசி 7 வைடுகளையும் கொடுத்து மோசமான சாதனையை படைத்தார். துல்லியமாக வீசும் பும்ராவின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை டுனொவன் பெரொரா பறக்கவிட்டார். அதன்பிறகு ரன்களை வாரி வழங்கினார். எனவே இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங், பும்ரா இருவரும் துல்லியமாக பந்து வீசினால் தென்னாப்பிரிக்கா பேட்டர்களை கட்டுபடுத்த முடியும். முதல் இரண்டு போட்டிகளைப் பொறுத்தவரை, நம்பிக்கை தரும் விதமாக வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு மட்டுமே உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இவரின் பந்துவீச்சு எதிரணி பேட்டர்களுக்கு சிரமத்தை உண்டாக்கக்கூடும்.
தென்னாப்பிரிக்காவின் பலம்
முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய குயின்டன் டிகாக் அடுத்த போட்டியில் அதிரடியாக ஆடினார். எனவே இன்றைய போட்டியில் இவரின் அதிரடி ஆட்டம் தொடரக்கூடும். எய்டன் மார்க்ரம், டெவால் பிரேவிஸ் மற்றும் டுனொவன் பெரொரா இவர்களின் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளது. பின் வரிசையில் களமிறங்கும் மில்லரின் சிறப்பான ஆட்டமும் அணிக்கு பலமாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை லுங்கி நெகிடி, மார்க்கோ யான்சன் மற்றும் பார்ட்மேன் சிறப்பாக உள்ளது. இவர்களின் பந்துவீச்சு மற்றும் ஒருங்கிணைந்து ஆடுவது இந்திய அணிக்கு நெருக்கடியை உண்டாக்கும்.
தர்மசாலா மைதானம்
தர்மசாலா மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருப்பதோடு அல்லாமல் கூடுதல் பவுன்ஸ் ஏற்படும் என்பதாலும் இரு அணி வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். தவுலதார் மலைதொடரின் கீழே அமைந்துள்ள எழில்மிகு அமைப்புடைய தர்மசாலா மைதானம், இமாச்சல் பிரதேசத்தில் உள்ளது. இங்கு வெப்பநிலை 10 செல்சியற்கு குறைவாக இருக்கும் என்பதால் குளிர்ந்த சூழல் நிலவும், இதனால் இரவு நேரத்தில் அதிக பனிப்பொழிவு ஏற்படும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யக்கூடும்.
இதற்கு முன் இம்மைதானத்தில் இரு அணிகளும் 2015ஆம் ஆண்டு டி-20யில் மோதின. அதில், தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இன்றைய இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது-டி20 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கத்துடன் ஆடுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

