3வது டெஸ்ட்| இங்கிலாந்து 387 ரன்கள் சேர்ப்பு.. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்! கேஎல் ராகுல் 50!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பும்ரா 5 விக்கெட்.. இங்கிலாந்து 387 சேர்ப்பு!
3வது டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பந்துவீசுமாறு பணித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
ஜோ ரூட் 104 ரன்களும், ஜேமி ஸ்மித் 51 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. 40 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்த கருண் நாயர் மீண்டும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றினார்.
கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும் வெளியேற, ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிவரும் கேஎல் ராகுல் அரைசதமடித்து விளையாடிவருகிறார். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் அடித்து இந்தியா விளையாடிவருகிறது.