உலகக்கோப்பை
உலகக்கோப்பைpt web

2023 உலகக் கோப்பை: ரச்சின் ரவீந்திரா டூ ரஹ்மத் ஷா... ஒவ்வொரு அணிகளின் சிறந்த வீரர்கள் யார்?

2023 உலகக்கோப்பை தொடரில் சில அணிகள் எதிர்பார்த்தபடி ஆடியிருக்கின்றன, ஒருசில அணிகள் எதிர்பார்ப்பையும் மீறி செயல்பட்டிருக்கின்றன, ஒருசில அணிகள் ஏமாற்றம் கண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஸ்டார் பிளேயர் யார்? பார்ப்போம்...!

1. இந்தியா - ஜஸ்ப்ரித் பும்ரா

ஜஸ்ப்ரித் பும்ரா
ஜஸ்ப்ரித் பும்ரா

ரன் மழை பொழிந்துகொண்டிருக்கும் விராட் கோலி, ஐந்தே போட்டிகளில் 16 விக்கெட்டுகள் அள்ளியிருக்கும் முகமது ஷமி ஆகியோரை இந்தியாவின் சிறந்த வீரராக நினைக்கலாம். ஆனால், அவர்களை விடவும் பும்ரா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மகத்தானது.

முதல் ஸ்பெல்லிலேயெ ஒவ்வொரு அணியின் முதுகெலும்பையும் உடைத்துவிடுகிறார் பும்ரா. வெறும் 3.65 என்ற எகானமியில் பந்துவீசும் அவர், டாப் ஆர்டருக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்துகிறார்.

அதிலிருந்து மீள நினைத்து மற்ற பௌலர்களிடம் எதிரணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழக்கின்றனர். எப்போதும் போல் விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் ரோஹித் இவரிடம் பந்தைக் கொடுக்க, ஒவ்வொரு முறையும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார் பும்ரா.

2. தென்னாப்பிரிக்கா - குவின்டன் டி காக்

குவின்டன் டி காக்
குவின்டன் டி காக்

9 போட்டிகளில் 591 ரன்கள் விளாசி இந்தத் தொடரின் டாப் ரன் ஸ்கோரராகத் திகழ்கிறார் டி காக்.

65.66 என்ற சராசரியில் ஆடும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

57 ஃபோர்களும், 21 சிக்ஸர்களும் விளாசியிருக்கும் அவர், 4 போட்டிகளில் சதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த ஸ்கோரையும் 100+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் அடித்து நொறுக்கியிருக்கிறார் டி காக்.

3. ஆஸ்திரேலியா - ஆடம் ஜாம்பா

ஆடம் ஜாம்பா
ஆடம் ஜாம்பா

மேக்ஸ்வெல், வார்னர், மிட்செல் மார்ஷ் என பல வீரர்கள் சில அசத்தல் பெர்ஃபாமன்ஸ்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து சீராக ஆடி அணியின் வெற்றிக்கு பங்களித்துவரும் ஒரு வீரர் என்றால் அது ஆடம் ஜாம்பா தான். ஒவ்வொரு போட்டியிலுமே தன் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கும் அவர், லீக் சுற்றில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் எடுக்கத் தவறிய அவர், அடுத்த 8 போட்டிகளிலுமே விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

4. நியூசிலாந்து - ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

கேன் வில்லியம்சனின் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்தவர், பேட்டிங் பௌலிங் அனைத்திலும் அசத்தி ஆல் ரவுண்டராக மிரட்டிக்கொண்டிருக்கிறார். 70.62 என்ற சராசரியில் 565 ரன்கள் குவித்து இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது டாப் ஸ்கோரராக உருவெடுத்திருக்கிறார் அவர். மூன்றாவது வீரராக இறங்கினாலும் சரி, ஓப்பனராக இறங்கினாலும் சரி அந்த அணியின் முக்கிய பேட்டராக விளங்குகிறார் அவர். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகள் எடுத்து அணிக்கு பங்களித்திருக்கிறார்.

5. பாகிஸ்தான் - அப்துல்லா ஷஃபீக்

அப்துல்லா ஷஃபீக்
அப்துல்லா ஷஃபீக்

பெரிதாக எந்த வீரரும் தனித்து தெரியாத பாகிஸ்தானின் இந்த உலகக் கோப்பையில் ஓரளவு ஜொலித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார் 23 வயது தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபீக். விளையாடிய 8 போட்டிகளில் பாதியில் 50+ ஸ்கோர்கள் (1 சதம், 3 அரைசதங்கள்) அடித்து அசத்தியிருக்கிறார் அவர். 93.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அந்த அணிக்கு நல்ல தொடக்கங்கள் கொடுத்தார் அவர். இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான் ஆகியோர் கொடுக்காத நம்பிக்கையை அந்த அணிக்குக் கொடுத்திருக்கிறார் அவர்.

6. ஆப்கானிஸ்தான் - ரஹ்மத் ஷா

ரஹ்மத் ஷா
ரஹ்மத் ஷா

நம்பர்களாகப் பார்த்தால் பல ஆப்கானிஸ்தான் வீரர்கள் அணிக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ரஹ்மத் ஷாவின் பங்களிப்பு அளப்பரியது. 3 அரைசங்களோடு இந்த உலகக் கோப்பையில் 320 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர். இந்த 3 அரைசதங்களுமே பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக சேஸிங் செய்தபோது வந்தவை. தொடர்ந்து 3 போட்டிகளில் பெரிய இலக்குகளை சேஸ் செய்தபோது ஆப்கானிஸ்தானின் நங்கூரமாய் நின்று ஆடியிருக்கிறார் ரஹ்மத் ஷா.

7. இங்கிலாந்து - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

படுமோசமான இந்த உலகக் கோப்பையில் எங்கிருந்து ஒரு நல்ல வீரரைத் தேர்ந்தெடுப்பது! காயம் காரணமாக 3 போட்டிகளில் ஆடாத பென் ஸ்டோக்ஸ்தான் கடைசியில் இந்த அணியின் சிறந்த வீரராகத் திகழ்ந்திருக்கிறார். 6 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் என 304 ரன்கள் விளாசினார் அவர். அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதெல்லாம் வழக்கம்போல் தனி ஆளாக நின்று அணியை மீடடெடுத்திருக்கிறார் ஸ்டோக்ஸ். ஒருவேளை அவர் முதல் 3 போட்டிகளில் ஆடியிருந்தால் இங்கிலாந்தின் நிலை மாறியிருக்குமே என்று இப்போது பலரும் நினைக்கிறார்கள்.

8. வங்கதேசம் - மெஹதி ஹசன் மிராஜ்

மெஹதி ஹசன் மிராஜ்
மெஹதி ஹசன் மிராஜ்

சொல்லப்போனால் அவருடைய செயல்பாடு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருந்தாலும், ஒட்டுமொத்த அணியுமே சுமாராகவே செயலபட்டிருப்பதால் மெஹதியை தேர்வு செய்யவேண்டியதாக இருக்கிறது. 201 ரன்களும் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார் அவர். பேட்டிங்கில் பெருமளவு சொதப்பியிருந்தாலும், அந்த அணி பௌலர்களில் இவர்தான் கொஞ்சமேனும் ஆறுதல் தரும் செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.

9. இலங்கை - தில்ஷன் மதுஷன்கா

தில்ஷன் மதுஷன்கா
தில்ஷன் மதுஷன்கா

இந்தத் தொடரில் இலங்கை பெருமைப்படக்கூடிய ஒரே விஷயம் இவர்தான்!

மிகவும் சிறப்பாக செயல்பட்டு பலரின் கவனத்தையும் தன் மீது திருப்பினார் தில்ஷன் மதுஷன்கா. ஒட்டுமொத்த அணியும் சொதப்பியிருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் இவர் தன் பங்களிப்பை செவ்வென செய்துகொண்டே இருந்தார். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அவர், தன் ஸ்லோ பால்கள் மூலம் உலகத்தர பேட்ஸ்மேன்களையும் தடுமாறவைத்தார்.

10. நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

ஸ்காட் எட்வர்ட்ஸ்
ஸ்காட் எட்வர்ட்ஸ்

பேட்டிங், கேப்டன்சி இரண்டிலுமே அசத்தியிருக்கிறார் ஸ்காட் எட்வர்ட்ஸ். ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியின் டாப் ஆர்டர் ஏமாற்ற, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும், பெரும்பாலும் பௌலர்களையும் வைத்துக்கொண்டு நன்கு போராடியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவரது 78 நாட் அவுட் இந்த உலகக் கோப்பையின் சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக அமையும். பேட்டிங், கேப்டன்சி மட்டுமல்லாமல் கீப்பிங்குமே நன்றாக செய்தார் இவர். 13 கேட்ச், 2 ஸ்டம்பிங் என இந்த உலகக் கோப்பையில் அதிக டிஸ்மிசல்களுக்குக் காரணமான விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் இவர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com