டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை.. வரலாறு படைத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர்.
டி20 கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஸ்பின்னர்கள் வரிசையில் முன்னாள் சிஎஸ்கே வீரரும், தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளருமான இம்ரான் தாஹிர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.
1979-ம் ஆண்டு பிறந்த இம்ரான் தாஹிர் 46 வயதை கடந்தும் டி20 உலகில் தன்னுடைய பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தசூழலில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர் புதிய உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
உலகசாதனை படைத்த இம்ரான்தாஹிர்..
நடந்து கொண்டிருக்கும் 2025 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 9வது ஆட்டத்தில், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த கயானா அணி ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் 211 ரன்களை சேர்த்தது.
அதற்குபிறகு விளையாடிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 128 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. 4 ஓவரில் ஒரு ஓவர் மெய்டன் உடன் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் மற்றும் இரண்டாவது உலக வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.