WC2023: 6வது முறையாக சாம்பியன்.. வரலாற்றை மாற்றி எழுதிய ஆஸ்திரேலியா! இந்தியாவின் போராட்டம் வீண்!

6வது முறையாக ஆடவர் உலகக்கோப்பையைக் கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
australia
australiatwitter

2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டுமுறை சாம்பியனான இந்தியாவும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவ்விரு அணிகளும், இன்று (நவ. 19) குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் மிக இலகுவான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னில் வெளியேறினார். அவர் ஷமி பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுபோல் மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுசேன் இணை, நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிலும் ஹெட், 95 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். இந்த இணையைப் பிரிக்க, ரோகித் சர்மா பல வழிகளைக் கையாண்டபோதும் அது பலனளிக்கவில்லை.

இதையும் படிக்க: WC Final: அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து கோலியைக் கட்டிப்பிடித்த பாலஸ்தீன ஆதரவாளர்! யார் அவர்?

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இறுதிவரை வெற்றிக்காகப் போராடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 137 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் லபுசேன் 110 பந்துகளில் 58 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், பும்ரா 2 விக்கெட்கள் எடுத்தார். முகம்மது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆடம் ஜம்பாவைப் பின்னுக்குத் தள்ளி முகம்மது ஷமி முதலிடம் பிடித்தார். அவர் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன்மூலம் 24 விக்கெட்களை எடுத்தார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி, கடந்த 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் வெற்றிபெற்று ஐந்து முறை சாம்பியனாகி இருந்தது. தற்போது 6வது முறையாகக் கோப்பையை வென்று, மீண்டும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக, முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து ஆஃப்கானிஸ்தானுடன் வாழ்வா சாவா போட்டியில் வென்று, பின்னர் அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி கோப்பையை தட்டிப்பறித்துள்ளது ஆஸ்திரேலியா.

நாக் அவுட் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டாலே கோப்பை, தமக்குத்தான் என்று நினைத்து ஆடும் ஆஸ்திரேலிய அணி, அதன்படியே தற்போது மீண்டும் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேநேரத்தில் லீக் போட்டி முதல் அரையிறுதி வரை தொடர் வெற்றிகளைப் பெற்று அசுரபலத்துடன் வலம் வந்த, இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது, அதிலும் இந்திய மண்ணில் நடைபெற்ற கோப்பையை இழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு, இந்த முறையாவது பழிதீர்க்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தக் கனவையும் இந்திய வீரர்கள் பொய்யாக்கி உள்ளனர்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்: சுரங்கத்தில் 7 நாட்களாக சிக்கிதவிக்கும் 41 தொழிலாளர்களின் நிலைஎன்ன? கவலையில் உறவினர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com