தொடங்கியது யு19 உலகக்கோப்பை: முதல் போட்டியில் அசத்திய அயர்லாந்து, SA; சொதப்பிய அமெரிக்கா, WI!

யு19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவும், அயர்லாந்தும் வெற்றிபெற்றுள்ளன.
u19 world cup
u19 world cuptwitter

ஐசிசி19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை 2024 தொடர், இன்று தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. முதலில் இலங்கையில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில், நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

  • குரூப் Aயில் பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும்,

  • குரூப் Bயில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும்,

  • குரூப் Cயில் ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும்

  • குரூப் Dயில் ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்பின் 4 குரூப்களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போடி நடக்கவுள்ளது. இத்தொடர், அடுத்தமாதம் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், இந்திய அணி உதய் சஹரன் தலைமையில் பயணிக்கிறது. யு19 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளன. கடந்த முறை உலகக்கோப்பை தொடரை யாஷ் துல் தலைமையிலான இந்திய யு19 அணி வென்றது.

முதல் போட்டி - 105 ரன்னில் சுருண்ட அமெரிக்கா!

இந்த நிலையில், இன்று தொடங்கிய யு19 உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, குரூப் ஏயில் பங்கேற்றிருந்த அமெரிக்காவும் அயர்லாந்தும் முதலில் மோதின. இதில் டாஸ் ஜெயித்த அயர்லாந்து அமெரிக்காவை பேட் செய்ய பணித்தது. அதன்படி அவ்வணி 40.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அவ்வணியில் குஷ் பாலா அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை நோக்கிய விளையாடி அயர்லாந்து 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மிரட்டிய தென்னாப்ரிக்கா - போராடி தோற்ற மேற்கிந்திய தீவுகள்!

மற்றொரு போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த மேற்கிந்திய தீவு அணி, தென்னாப்பிரிக்காவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, அவ்வணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தேவன் மாரிஸ் 65 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தத்தளித்தது. எனினும் இடையில் களமிறங்கிய ஜெவல் ஆண்ட்ரூ தனியொருவனாய்ப் போராடினார். அவர் 96 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக யாரும் நின்று விளையாடாததால் அந்த அணி தோல்வியை நோக்கிப் பயணித்தது. இறுதியில் அந்த அணி, 40.1 ஓவர்களில் 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com