கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.. திட்டமிட்டப்படி இந்தியாவில் விளையாட வருமா பாகிஸ்தான் அணி?

ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டப்படி பாகிஸ்தான் அணி, இந்தியாவில் விளையாட வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Pakistan Team
Pakistan TeamTwitter

வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதுகின்றன. சென்னையில் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் 2 போட்டிகளுடன் சேர்த்து மொத்தம் 5 போட்டிகள் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் முதல் அரையிறுதிப் போட்டியும், 16 ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைப் போட்டி அட்டவணை வெளியான நிலையில், இந்தியா சென்று விளையாட இன்னும் தங்கள் அரசு அனுமதி வழங்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியிலோ அல்லது அரையிறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடக்கும் போட்டியிலோ பங்கேற்பதென்பது பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியை பெங்களூருவுக்கு மாற்றவும், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் நடத்தவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு அட்டவண வெளியிடுவதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. ஏனெனில், சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு உகந்தது என்பதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது.

இதேபோல் பெங்களூருரு மைதானம் பேட்டிங்கிற்கு உகந்தது என்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானப் போட்டியை சென்னை சேப்பாக்கத்திற்கு மாற்றவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஐசிசி நிராகரித்துள்ளது. எனினும், அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் பட்சத்தில், பாதுகாப்பு காரணமாக மும்பையில் விளையாடாமல், கொல்கத்தாவில் விளையாட பாகிஸ்தான் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு ஐசிசி சம்மதித்துள்ளது. உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிப்பெற்ற 7 அணிகளும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எதிர் அணியுடன் மோதும் தத்தமது போட்டிகளை தனி அட்டவணையாக வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்படியொரு அட்டவணையை வெளியிடவில்லை.

பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்ட நிலையில், தற்போது, தங்கள் நாட்டு அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே இந்தியா வந்து விளையாட முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி, இந்திய மண்ணில் வந்து விளையாடும் என்று ஐசிசி நம்பிக்கையுடன் உள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com