ICC ODI Rankings | ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. அடுத்தடுத்த இடத்தில் RO-KHO
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தையும், 2ஆவது இடத்தை விராட் கோலியும் பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2வது இடத்தில் நியூசிலாந்தும், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. அதேபோல், டி20யில் இந்தியா 273 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 3வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன. அதேபோல் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மாவும் (781), விராட் கோலியும் (773) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஏற்கெனவே முதலிடத்தைத் தக்கவைத்திருக்கும் ரோகித் சர்மாவைவிட, விராட் கோலி எட்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 2 சதம், 1 அரைசதத்துடன், 151 சராசரி மற்றும் 117.05 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 302 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து அவர் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்தின் டேரில் மிட்செல் மற்றும் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் முறையே 3வது மற்றும் 4வது இடங்களுக்குத் தள்ளப்பட்டனர். 5ஆவது இடத்தில் ஷுப்மன் கில் உள்ளார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். கோலி கடைசியாக மார்ச் 2021இல் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். அதன் பிறகு பாகிஸ்தானின் பாபர் அசாம் அவருக்குப் பதிலாக முதலிடத்தைப் பிடித்தார்.
கோலியைத் தவிர, குல்தீப் யாதவும் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறார். அவர் மூன்று இடங்கள் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தையும், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2வது இடத்தையும் பிடித்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடரில் குல்தீப் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தார், மூன்று போட்டிகளில் 6.23 என்ற எகானமி ரேட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா 913 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

