\
ICC announces major changes to ODI, T20 World Cups
iccx page

IPL பாணியில் எலிமினேட்டர்.. T20 மற்றும் ODI உலகக்கோப்பை தொடர்களை மாற்றிய ICC.. புதுமை என்ன?

இந்த அதிரடி மாற்றங்கள் உலகக் கோப்பை தொடர்களை இன்னும் பரபரப்பாக மாற்றும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அணிகளுக்கும், வீரர்களுக்கும் இது ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.
Published on

வளர்ந்து வரும் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தகுந்த மாதிரி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களுக்கான வடிவத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடியாக மாற்றி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐசிசியின் ஆண்டுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கும். இதில் தரவரிசையில் கடைசியில் உள்ள 3 அணிகள் முதன்மைச் சுற்றுக்கு முன்பாக 'சூப்பர் சீரிஸ்' என்ற தகுதிச் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் ஓர் அணி மட்டுமே முதன்மைச் சுற்றுக்கு தகுதி பெறும், மற்ற 2 அணிகள் உடனடியாக வெளியேற்றப்படும்.

world cup
world cup

இதனைத் தொடர்ந்து, முதன்மைச் சுற்றுக்கு முன்னேறும் 12 அணிகள் தலா 6 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் 4ஆவது இடத்தில் உள்ள 1 அணி என மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குத் தகுதி பெறும். முன்னதாக, 14 அணிகளை மீண்டும் 12 அணிகளாகக் குறைக்கலாம் என யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதை தற்போது ஐசிசி நிராகரித்துள்ளது.

அதேபோல், டி20 உலகக் கோப்பை தொடரிலும் 'எலிமினேட்டர்' முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 20 அணிகள் தலா 4 அணிகள் வீதம் 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 10' சுற்றுக்கு முன்னேறும். இந்த 10 அணிகள் தலா 5 அணிகள் வீதம் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் 2 அணிகள் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும். 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' சுற்றில் மோதும்.

t20 world cup
t20 world cupx page

இதில் வெற்றி பெறும் 2 அணிகள் மீதமுள்ள 2 அரை இறுதி இடங்களைப் பிடிக்கும். இந்த அதிரடி மாற்றங்கள் உலகக் கோப்பை தொடர்களை இன்னும் பரபரப்பாக மாற்றும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அணிகளுக்கும், வீரர்களுக்கும் இது ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com