உலகின் NO.1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறிய ஹாரி ப்ரூக்.. ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி மிரட்டல் சாதனை!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரையில் டாப் 10 வீரர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால், 1970-80 காலகட்டங்களில் அறிமுகமாகி 2000-க்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்களே அதிக ரன்களை குவித்தவர்களாக இருந்தார்கள்.
அந்த பட்டியலை உடைத்து முதல்வீரராக முன்னேறிய அலைஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். 12472 டெஸ்ட் ரன்களுடன் முதலிடத்திலிருந்த அலைஸ்டர் குக்கை, தற்கால இங்கிலாந்து ஜாம்பவான் வீரராக இருக்கும் ஜோ ரூட் பின்னுக்கு தள்ளி 12886 ரன்களுடன் முதலிடத்தில் இருந்துவருகிறார்.
இந்நிலையில் அலைஸ்டர் குக், ஜோ ரூட் முதலிய வீரர்களின் கால்தடத்தை பின்பற்றும் இளம் இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக், ஜோ ரூட் முதலிய அனைத்து இங்கிலாந்து வீரர்களின் சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் அனைவரும் ஆரூடம் தெரிவித்துவருகின்றனர்.
அதனை மெய்பிக்கும் விதத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ஹாரி ப்ரூக், அறிமுகமான இரண்டே வருடத்தில் உலகத்தின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறி சாதனை படைத்துள்ளார்.
நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்!
இங்கிலாந்தின் 25 வயது இளம் கிரிக்கெட் வீரரான ஹாரி ப்ரூக் கடந்த 2022-ம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் ப்ரூக், 66 சராசரியுடன் 8 சதங்கள், 10 அரைசதங்களுடன் ஒரு இரட்டை சதமும், ஒரு முச்சதமும் அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 317 ரன்கள் இருக்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக 171, 123 ரன்கள் என தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த ஹாரி ப்ரூக், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருந்த ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த நிலையில், ஹாரி ப்ரூக் 898 புள்ளிகளுடன் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.