“அம்பயரின் முடிவால் ஆக்ரோசமாக ஸ்டம்பை அடித்த ஹர்மன்ப்ரீத்” - போட்டிக்கு பிறகும் ஆவேச பேச்சு! #Video

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் டிஆர்எஸ் இல்லாத நிலையில், இந்திய வீரர்கள் கேட்ட அத்தனை விக்கெட்டுகளுக்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டது இந்திய அணி வெல்ல முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது.
Harmanpreet Kaur
Harmanpreet KaurTwitter

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வந்தது. டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரில் சிறப்பான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.

சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்ட தீயோல் மற்றும் ஸ்மிரிதி!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வங்கதேச அணியும், இந்திய அணியும் மாறிமாறி வெற்றிபெற்ற நிலையில், தொடரை முடிவு செய்யும் 3வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்த நிலையில், சிறப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் 225 ரன்னுக்குள் வங்கதேசத்தை கட்டுப்படுத்தினர்.

IndW vs BanW
IndW vs BanW

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகவே இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தீயோல் மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, இந்திய அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டு சேர்த்தனர். ஸ்மிரிதி 59 ரன்னிலும், தீயோல் 77 ரன்களும் அடுத்தடுத்து வெளியேறியது வங்கதேசத்துக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தது.

மோசமான அம்பயரிங்கால் ஸ்டம்பை அடித்த ஹர்மன்ப்ரீத்!

அதற்கு பிறகு களமிறங்கிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 14 ரன்னில் இருந்த போது, வங்கதேச ஸ்பின்னர் நஹிதா அக்டர் LBW விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார். பவுலர் கத்தியவுடன் அம்பயர் விக்கெட்டுக்கு கையை உயர்த்தினார். ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத கவுர், பந்து பேட்டில் பட்டு சென்றதாக அம்பயரிடம் கத்தினார். அதுமட்டுமல்லாமல் பேட்டை கொண்டு ஸ்டம்பை அடித்து விட்டு கத்திக்கொண்டே வெளியேறினார். பின்னர் பவுண்டரி லைனுக்கு சென்று இந்திய ரசிகர்களை பார்த்து தம்ப்ஸ் அப் செய்து, தன்னை தானே சமாதானம் செய்து வெளியேறினார்.

அதற்கு பிறகு தொடர்ச்சியான இரண்டு ரன் அவுட்டுகள் என இந்திய அணி சொதப்ப, போட்டி அந்த பக்கமா இந்த பக்கமா என மாறியது. அப்போது மீண்டும் ஒரு LBW விக்கெட் அமன்ஜோத் கவுருக்கு வழங்கப்பட்டது. அவரும் அம்பயரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளியேறினார். அனைத்து ரீப்ளேவும் லாங்க் ஷாட் மூலமாக மட்டுமே காட்டப்பட்டது, டெக்னாலஜி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் வங்கதேச கிரிக்கெட் இன்னும் பின் தங்கியிருப்பதை போட்டியை பார்த்த ரசிகர்களாலாயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

5 பந்துக்கு 2 ரன் இருந்த போது தேவையில்லாமல் சிங்கிள் எடுத்த ஜெமிமா!

என்ன தான் இந்திய அணிக்கு எல்லாம் பாதகமாக போனாலும் கடைசி வரை களத்தில் நின்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி ஓவரில் வெற்றிபெற 3 ரன்களே தேவையிருந்த போது, சிங்கிள் எடுத்து டெய்ல்எண்டர் பேட்டரான மேக்னாவிற்கு ஸ்டிரைக் கொடுத்தது பெரிய தவறாக போனது. 9 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இந்தியா வெற்றி பெற 4 பந்துக்கு 1 ரன்னும், வங்கதேசம் வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவையாக இருந்தது. அப்போது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வங்கதேச நட்சத்திர பந்துவீச்சாளர் மருஃபா அக்தெர் மேக்னாவை வெளியேற்றி போட்டியை சமனுக்கு கொண்டு சென்றார். இந்திய அணியின் போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்தது.

IndW vs BanW
IndW vs BanW

எளிதாக வென்று விடும் என்ற இடத்திலிருந்து இந்திய அணி போட்டியை கோட்டை விட்டிருப்பது, மீண்டும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும், டெய்ல் எண்டர்களோடு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை ஜெமிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அதுபோல சூப்பர் ஓவர் இல்லாததும், டிஆர்எஸ் இல்லாததையும் குறிப்பிட்டு மோசமான அம்பயரிங்கையும் விமர்சித்து வருகின்றனர்.

இது போன்ற மோசமான அம்பயரிங்கை பார்த்ததில்லை!

போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், போட்டி நடுவர்கள் குறித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், “ இந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். முக்கியமாக போட்டியை தாண்டி அம்பயரிங் செய்த விதம் எங்களை அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. அடுத்தமுறை வங்கதேசம் வரும்போது இது போன்ற அம்பயரிங்களுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று தயாராகிவிட்டு வருவோம்.

தீயோல் மற்றும் ஜெமிமா இருவரும் சிறப்பாக விளையாடினர். வங்கதேச வீரர்கள் சரியான நேரத்தில் ரன்களை எடுத்துவந்தனர். இரண்டு அணியினருக்கும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தனர். எல்லாவற்றையும் தாண்டி மோசமான அம்பயரிங்கும், முடிவுகளும் எங்களை ஏமாற்றம் அடைய வைத்தது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com