6,6,6,6,6,4.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஹர்திக் பாண்டியா!
விஜய் ஹசாரே தொடரில் ஹர்திக் பாண்டியா விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் அவர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 எடுத்தார்.
உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான விஜய் ஹசாரே போட்டி தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் பல்வேறு அணிகளும் தங்களது சாகசங்களைக் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா, ஒரே ஓவரில் 34 ரன்கள் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற விதர்பாவுக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக களமிறங்கிய் ஹர்திக் பாண்ட்யா சதம் அடித்து அசத்தினார். பரோடா அணி 5 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, விதர்பா அணியின் பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார்.
குறிப்பாக, வேறு எந்த பேட்டர்களும் 30 ரன்களைக்கூட தாண்டாத நிலையில், பரோடா இன்னிங்ஸை அவர் சிறப்பாகக் கொண்டு சென்றார். ஒருகட்டத்தில், 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா, பார்த் ரேகாடே வீசிய அடுத்த ஆறு பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அடுத்த நான்கு நிமிடங்களில், சதமடித்து அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் அவர் 5 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்தார். இறுதியில் அவர் 92 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய இந்த அதிரடியால் பரோடா அணி 293/9 ரன்களைக் குவித்தது. 294 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி விளையாடி வருகிறது.

