
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா 3-வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இத்தொடரின் 3-வது போட்டியில் இளம் வீரர் திலக் வர்மாவை 50 ரன்கள் அடையவிடாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுயநலத்துடன் நடந்து கொண்டதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
அதாவது 3-வது போட்டியில் 160 ரன்களை துரத்தும்போது சூரியகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த திலக் வர்மா, 18.4-வது பந்தில் 49 ரன்களை எட்டினார். அப்போது திலக் வர்மா அரைசதம் அடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாண்டியா அதிரடியான சிக்சர் பறக்கவிட்டு ஃபினிஷிங் செய்தார்.
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் திலக் வர்மா போன்ற இளம் வீரருக்கு அரைசதம் அடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தால் என்ன என்று பாண்டியாவை சரமாரியாக விமர்சித்தனர். 14 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்படும்போது திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவசரப்பட்டு ஃபினிஷிங் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று பாண்டியாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்தார்.
சோப்ராவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அணியின் வெற்றியை விட தனிநபரின் சாதனைதான் முக்கியமா? என்றும் டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுவதே உண்மையான சாதனை எனவும் ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா தற்போது, தோனியை ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா அவரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது என பல்டியடித்து பேசியுள்ளார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டியில், “அது மிகவும் சுவாரசியமான ஒரு விவாதம். அந்த விவாதத்தில் ஹர்திக் பாண்டியா அதிகமாக கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார். ஆனால் அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் ஏன் தனிநபர் சாதனையை பற்றி பேசுகிறீர்கள்? என்ற மற்றொரு தரப்பு மிகவும் ஆழமான கருத்தை பேசியுள்ளது.
ஒருமுறை எதிர்புறம் விராட் கோலி இருந்த காரணத்தால் எம்எஸ் தோனி ஃபார்வர்ட் டிஃபன்ஸ் ஷாட் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. ஏனெனில் விராட் கோலியை ஃபினிஷிங் செய்ய விரும்பிய தோனி, வெற்றிக்கான பாராட்டுகளை தாம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அப்பேர்பட்ட தோனியை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டிருக்கிறார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா அவரைப் போலவே செயல்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை” எனக் கூறினார்.