18 பந்தில் அரைசதம் அடித்த அபிஷேக்.. ஆனால் ஹர்திக் தான் ஹீரோ! அனல்பறந்த போட்டி!
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் பஞ்சாப் கேப்டன் அபிஷேக் சர்மா 18 பந்தில் அதிரடி அரைசதம் அடித்து அணியை 222 ரன்கள் வரை கொண்டு சென்றார். ஆனால் பரோடா அணிக்காக காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா 77 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஹீரோவாக மாறினார்.
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்..
அந்த வகையில், இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் கேப்டன் அபிஷேக் சர்மா 18 பந்தில் அரைசதமடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்..
ஆனால் அபிஷேக்கின் அதிரடிக்கு பதிலடி கொடுக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, பரோடா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 222 ரன்களை குவித்து மிரட்டியது.. கடந்தபோட்டியை போல மீண்டும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 18 பந்தில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 50 ரன்கள் அடித்து அசத்தினார்..
223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பரோடா அணியில், காயத்திலிருந்து மீண்டுவந்து கம்பேக் கொடுத்திருக்கும் ஹர்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்து பரோடா அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதில் அவர் 7 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் பறக்கவிட்டார்..
கடந்த போட்டியில் 12 பந்தில் அரைசதமும், 32 பந்தில் சதமும் அடித்த அபிஷேக் சர்மா ஹீரோவாக மாறிய நிலையில், இந்தப்போட்டியில் 18 பந்தில் அரைசதமடித்தபோதும் துரதிருஷ்டவசமாக அவுட்டாகி வெளியேறினார்..

