NZvAFG | நிறைய நிதானம். கொஞ்சம் அதிரடி… நியூசிலாந்தை மீட்ட கிளென் ஃபிளிப்ஸ்..!

ரஷீத் கான் வீசிய 41வது ஓவரில் ஒரு ஃபோர், முஜீப் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் என விளாசிய கிளென் ஃபிளிப்ஸ் , 69 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
Glenn Phillips
Glenn PhillipsR Senthil Kumar
போட்டி 16: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
முடிவு: 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி (நியூசிலாந்து - 288/6; ஆப்கானிஸ்தான் - 139 ஆல் அவுட், 34.4 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: கிளென் ஃபிளிப்ஸ் (நியூசிலாந்து)
பேட்டிங்: 80 பந்துகளில் 71 ரன்கள் (4 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்)
பௌலிங்: 3-0-13-0

கிளென் ஃபிளிப்ஸ் களத்தில் இறங்கியபோது நியூசிலாந்து அணி கொஞ்சம் சிக்கலான நிலையில் தான் இருந்தது. 21.4 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது நியூசிலாந்து. அதிலும் 15 பந்துகள் இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. 21வது ஓவரை வீசிய அஸ்மதுல்லா ஓமர்சாய் ரச்சின் ரவீந்திரா, வில் யங் இருவரையும் வெளியேற்றியிருந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய டேரில் மிட்செலை அடுத்த ஓவரிலேயே வெளியேற்றினார் ரஷீத் கான். களத்தில் இருந்த கேப்டன் டாம் லாதமும் அப்போதுதான் களமிறங்கியிருந்தார். அவர் ஒரு பந்து கூட சந்தித்திருக்கவில்லை. கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து இரு அப்செட்களை சந்தித்துவிட்ட கிரிக்கெட் உலகம், மூன்றாவது அப்செட் நெருங்குகிறதோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லாதமோடு சேர்ந்த அற்புதமாக விளையாடி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார் கிளென் ஃபிளிப்ஸ்.

Glenn Phillips
Cricket World Cup | உலகக் கோப்பையின் மூன்று டாப் பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் யார் யார்..?

அதிரடியாக ஆடுவதற்குப் பெயர் போனவரான ஃபிளிப்ஸ் தன் ஆட்டத்தை முழுமையாக மாற்றிக்கொண்டார். சூழ்நிலைக்கு ஏற்ப, தன் அணியின் தேவைக்கு ஏற்ப ஆடத் தொடங்கினார் அவர். ஒவ்வொரு பந்தையும் மிகவும் கவனமாக எதிர்கொண்டார். முதல் 17 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார் . ஒரு பௌண்டரி கூட அடிக்கவில்லை. அவர் சந்தித்த 18வது பந்தில் தான் முதல் பௌண்டரி அடித்தார். ஓமர்சாய் வீசிய மோசமான பந்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தேர்ட் மேன் திசையில் ஃபோர் அடித்தார். முகமது நபி வீசிய அடுத்த ஓவரில் இன்னொரு ஃபோர் வந்தது. இம்முறை எட்ஜ் மூலம் வந்தது அந்த பௌண்டரி.

ஆஃப் ஸ்பின்னர்களை எப்போதுமே அடித்து ஆடும் அவர், முஜீப், நபி ஆகியோரை கவனமாக எதிர்கொண்டார். ஆனால் 34வது ஓவரில் நபி வீசிய ஒரு பந்து அவரது ஆசையைத் தூண்டியது. மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்த அவர், நூலிழையில் தப்பித்தார். ஓமர்சாய் பௌண்டரி எல்லைக்கு முன்பு நின்றிருந்ததால் அவரால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. மூன்று ஓவர்கள் கழித்து ரஷீத் ஓவரிலும் ஒரு ஃபோர் அடித்தார் அவர். அவ்வப்போது பௌண்டரிகள் அடித்திருந்தாலும், அது அவரது இன்னிங்ஸின் போக்கை பாதிக்கவில்லை. மீண்டும் சூழ்நிலைக்கு ஏற்றது போலவே விளையாடத் தொடங்கினார். அவ்வப்போது கிடைத்த நல்ல பந்துகளை மட்டுமே தண்டித்தார். ஆனால் 40 ஓவர்கள் கடந்த பிறகு சற்று வேகமெடுத்தார் ஃபிளிப்ஸ்.

Glenn Phillips
Glenn PhillipsR Senthil Kumar

ரஷீத் கான் வீசிய 41வது ஓவரில் ஒரு ஃபோர், முஜீப் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் என விளாசியவர், 69 பந்துகளில் அரைசதம் கடந்தார். 45வது ஓவரில் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஸ்லோ பால்கள் வீச, கொஞ்சம் கூட கருணையே காட்டாமல் அவற்றை சிக்ஸர்கள் ஆக்கினார். கடைசி கட்டத்தில் லாதமும் அதிரடி காட்டியதால் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. 48வது ஓவரின் முதல் பந்தில் நவீன் உல் ஹக் வீசிய ஃபுல் டாஸை சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆஃப் திசையில் கேட்ச் ஆனார் ஃபிளிப்ஸ். ஒருகட்டத்தில் அந்த அணி 50 ஓவர்களில் 250 ரன்களைக் கடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கிளென் ஃபிளிப்ஸ் அவுட் ஆகும்போதே அந்த அணி 254 ரன்கள் எடுத்திருந்தது. அதனால் தான் ஃபிளிப்ஸ் அந்த விருதையும் வென்றார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் மிகவும் திறமையானவர்கள். உறுதியானவர்களும் கூட. மிடில் ஓவர்களில் ஒருசில விக்கெட்டுகளை இழந்தபின்னும் கூட நானும் டாம் லாதமும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது திருப்திகரமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. கடைசி வரை களத்தில் இருந்து நல்லபடியான ரன்னும் எடுத்ததுதான் சிறப்பான விஷயம். நாங்கள் இருவரும் களத்தில் இருந்தால் கடைசி 6 ஓவர்களில் எங்களால் 60 ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. சேப்மேன், சேன்ட்னர் இருவரும் இன்னிங்ஸை முடித்த விதம் இன்னும் அட்டகாசமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். நாங்கள் ஒருவருக்கொருவர் உழைத்து, ஒரு அணியாக விளையாடும் ஒரு நல்ல சூழ்நிலையைக் கொண்டிருக்கிறோம். இது முழுக்க முழுக்க, நீங்கள் உங்கள் பார்ட்னருக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதும், அவர் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று புரிந்துகொள்வதும் தான். நாங்கள் எங்களின் சாதக பாதகங்களை நன்கு அறிந்திருக்கிறோம்"

கிளென் ஃபிளிப்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com