Ind vs Pak
Ind vs PakTwitter

"2023 உலககோப்பையில் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள்"-முன்னாள் பாக்.வீரர் சர்ச்சை கருத்து

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை பதிவு செய்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ரானா நவேத்-உல்-ஹசன்.
Published on

இந்தியா பாகிஸ்தான் என்றாலே ஒரு போட்டி என்றால் கூட அனல்பறக்கும் போட்டியாகவே அமையும். அந்தவகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாட்டு ரசிகர்கள் கூட தங்களுடைய அணி மற்ற போட்டிகளை விட இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்றே நினைப்பார்கள். அதனால் தான் தற்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Ind vs Pak
Ind vs PakTwitter

நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் மாதம் தான் தொடங்கவிருக்கிறது என்றாலும், தற்போதே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்த விவாதங்கள் இரண்டு நாட்டின் தரப்பிலும் அதிகமாகவே இருந்து வருகின்றன. பல முன்னாள் வீரர்கள் பரபரப்பான கருத்துகளை வைத்து வரும் நிலையில், தற்போது முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான ரானா நவேத்-உல்-ஹசனும் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவுசெய்துள்ளார்.

"2000-ல் நடந்தது போன்றே தற்போதும் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள்!"

நாதிர் அலி போட்காஸ்டில் பங்கேற்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரானாவிடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரானா, “இந்திய அணி இந்தியாவில் விளையாடும் போது, ​​நிச்சயமாக அவர்களே விருப்ப அணியாக இருப்பார்கள். ஆனால் பாகிஸ்தானிடமும் வலுவான அணி உள்ளது. இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். ஆனால் மக்களின் ஆதரவை பொறுத்தவரை, எங்களுக்கு கணிசமான முஸ்லிம் மக்களின் ஆதரவு இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்களிடமிருந்தும் நாங்கள் கண்டிப்பாக ஆதரவைப் பெறுவோம்” என்று நவேத்-உல்-ஹசன் பாட்காஸ்டில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

அவருடைய பதிலுக்கு நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள், இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களையா என்று மீண்டும் நெறியாளர் கேட்கும் போது, ரானா அதை உறுதிப்படுத்தினார். பதிலளித்த அவர், “நிச்சயமாக, இந்திய முஸ்லிம்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். நான் அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு தொடர்களில் விளையாடியுள்ளேன், அப்போது எங்களை ஆதரிக்கும் பல ரசிகர்களை நான் கண்டிருக்கிறேன். இன்சமாம்-உல்-ஹக் கேப்டனாக இருந்த போது விளையாடிய இந்திய கிரிக்கெட் லீக்கில் (ஐசிஎல்), ​​எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்த அனைத்து அணிகளுக்கு எதிராகவும் விளையாடினோம், அங்குள்ள மக்கள் எங்களை எப்போதும் ஆதரித்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

உலகக்கோப்பையில் 7-0 என ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

இதுவரை நடந்துள்ள அனைத்து ஒருநாள் உலக்கோப்பை தொடரிலும், பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றிபெற்று 7-0 என ஆதிக்கம் செலுத்துவருகிறது. தற்போதும் அதே சாதனையை தொடர்ந்து நிலைநிறுத்த மென்-இன்-ப்ளூ அணி களமிறங்கவிருக்கிறது. ஆனால் சமபலத்துடன் இருக்கும் பாகிஸ்தான் அணி, அந்த ரெக்கார்டை உடைக்கும் முனைப்பில் களமிறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல்பறக்கும் போட்டியானது, அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com